
லண்டன்: பிரெக்ஸிட் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நடைபெற்று வந்த அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக, முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் பதவி விலகுவதாக பிரதமர் தெரசா மே வியாழக்கிழமை அறிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் முடிவை தொழிலாளர் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரெமி கார்பின் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் (பிரெக்ஸிட்) நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் எங்களால் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு விவாதித்து விட்டோம்.
எனவே, அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுகிறோம்.
தெரசா மே தலைமையிலான அரசின் பலவீனமும், ஸ்திரமற்ற தன்மையும், அந்த அரசால் பிரெக்ஸிட் விவகாரத்தை சரியான முறையில் கையாள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் ஜெரெமி கார்பின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு, கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதியோடு முடிவடைந்தது. எனினும், விலகலுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய வர்த்தக உறவு குறித்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்ததால் அந்த கெடு வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.