அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்

வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும்படி ரஷியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்


பெய்ஜிங்: வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும்படி ரஷியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சீனாவில் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவுடனான இரு தரப்பு உறவை மேம்படுத்தவும், எங்களது பிராந்தியம் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆபத்தான பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காகவும் எனது சீன சுற்றுப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்.

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒரு சாதனையாகும்.

அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ள சர்வதேச நாடுகளும், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளும் விரும்பினால், அந்த ஒப்பந்தத்தின் பலன்களை ஈரான் மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதை அந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானின் முயற்சியை முறியடிக்கும் வகையில், அந்த நாடு மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மிதவாதியாக அறியப்படும் ஹஸன் ரெüஹானி ஈரான் அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்த நாட்டுக்கும், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தனது அணு சக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

எனினும், அதிபர் ஒபாமா பதவிக் காலத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. அந்த நாட்டின் கச்சா எண்ணைய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஈரானிடமிருந்து பெருமளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், தற்போது சீனா வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com