இலங்கையில் பலத்த பாதுகாப்புடன் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்

ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் பலத்த பாதுகாப்புடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது.


கொழும்பு: ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் பலத்த பாதுகாப்புடன் புத்த பூர்ணிமா கொண்டாடப்பட்டது.
புத்த பூர்ணிமாவையொட்டி, 762 கைதிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறீசேனா பொதுமன்னிப்பு வழங்கினார்.
புத்தரின் பிறப்பு, அவர் ஞானம் பெற்றது, புத்தரின் மரணம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், மே மாதத்தின் பெளர்ணமி நாளை "புத்த பூர்ணிமா'வாக உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான புத்த பூர்ணிமா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
பெளத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையில் புத்த பூர்ணிமா 5 நாள்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தின்போது அந்நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு நாள்களாகக் குறைக்கப்பட்டன.
இதையடுத்து, இலங்கையில் புத்த பூர்ணிமா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன; நாடு முழுவதும் ஆயுதப் படைகள், சிறப்பு பாதுகாப்புக் குழுக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பெருமளவில் கூடும் கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும், கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்கள் பங்கேற்பு: புத்த பூர்ணிமாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அலங்கார விளக்குகளும், கொடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நடைபெற்ற புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களில், முஸ்லிம்களும் திரளாகப் பங்கேற்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, புத்த பூர்ணிமா சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும் பெருமளவில் குறைந்திருந்தன. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஆண்டுதோறும் புத்த பூர்ணிமா தினத்தன்று நாடு முழுவதும் சுமார் 6,000 அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வெறும் 92 அன்னதான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றன'' என்றார்.
பொது மன்னிப்பு: புத்த பூர்ணிமா தினத்தையொட்டி, 26 பெண்கள் உள்பட 762 கைதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா பொதுமன்னிப்பு வழங்கினார். இருந்தபோதிலும், பெளத்த துறவி கலகோடாட்டே ஞானசாராவுக்கு விடுதலை வழங்குவது குறித்து சிறீசேனா எதுவும் தெரிவிக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த கூட்டங்கள் தொடர்பாக ஞானசாரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெளத்த துறவிகள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com