ஈரானுடன் பதற்றம்: பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதால், பாரசீக வளைகுடா வான்வெளியில் பயணம் செய்யும் விமானங்களுக்கு
பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் (கோப்புப்படம்).
பாரசீக வளைகுடாவில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் (கோப்புப்படம்).


துபை: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவதால், பாரசீக வளைகுடா வான்வெளியில் பயணம் செய்யும் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இதனால், பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டுப் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அருகே 4 எண்ணெய்க் கப்பல்களை மர்ம நபர்கள் தாக்கி, நாசவேலையில் ஈடுபட்டனர்.

சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய்க் குழாய்களும் தாக்குலுக்கு உள்ளாகின. இத்தாக்குதலுக்கு ஈரானுடன் தொடர்புடைய ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். ஆனால், இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஈரானே முக்கியக் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டிவருகிறது. இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அமெரிக்கத் தூதர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரசீக வளைகுடாவில் ராணுவ நடமாட்டமும், பதற்றமும் அதிகரித்துவிட்டன.

இதனால், அப்பகுதி வான்வெளியில் பறக்கும் விமானங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவை தங்களது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே உள்ள நாடுகளுக்கு வான்வெளிப் பயணம் மேற்கொள்ள பாரசீக வளைகுடா முக்கிய வழித்தடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com