பயங்கரவாதத்துக்கு எதிராக போராட இலங்கைக்கு முழு ஆதரவு: இந்தியா

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட இலங்கைக்கு  தேவையான முழு ஆதரவை இந்தியா அளிக்கும் என்று இலங்கைக்கான இந்தியத்


கொழும்பு: பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட இலங்கைக்கு தேவையான முழு ஆதரவை இந்தியா அளிக்கும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உள்பட சுமார் 260 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்ற போதிலும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியது.

இந்த தாக்குதலையடுத்து, இலங்கையில் பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிப்பதால், அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகவும், தாக்குதலில் தொடர்புடையதாகவும் சுமார் 1000 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், ஜிகாதி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புத்த பூர்ணிமாவையொட்டி, கண்டியில் உள்ள பெளத்த மத புனித தலத்தில் இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சந்து வழிபாடு செய்தார். அதன் பின்னர், அங்குள்ள பெளத்த மதத் தலைவர்களை சந்தித்து புத்த பூர்ணிமா வாழ்த்து தெரிவித்த அவர்,  இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்தார். 

அத்துடன் ஜிகாதி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்ததை நினைவு கூர்ந்த பெளத்த மதத் தலைவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் பேராதரவு குறித்து  பாராட்டினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com