அமெரிக்காவைத் தாக்கினால், ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

"அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
அமெரிக்காவைத் தாக்கினால், ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

"அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் முற்றிலுமாக அழிக்கப்படும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
ரஷியா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
ஈரானால் அச்சுறுத்தல் நிலவி வருவதாகத் தெரிவித்து, பாரசீக வளைகுடா பகுதியில் தங்கள் நாட்டுப் போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரானும் மிரட்டல் விடுத்துவருகிறது. பாரசீக வளைகுடாப் பகுதியில் போர் ஏற்பட்டால், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிடுவோம் என்றும் ஈரான் எச்சரித்துவருகிறது. 
கப்பல்கள் தாக்குதல்: இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அருகே சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட 4 கப்பல்களைக் கடந்த 12-ஆம் தேதி மர்ம நபர்கள் தாக்கி நாசவேலையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹோர்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் மூடினால், கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு மாற்றுப்பாதையில் எடுத்துச் செல்லும் வகையில், சவூதி அரேபியா அமைத்திருந்த எண்ணெய்க் குழாய்களும் கடந்த 14-ஆம் தேதி தாக்குலுக்கு உள்ளாகின. 
இத்தாக்குதலுக்கு ஈரானுடன் தொடர்புடைய யேமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். ஆனால், இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஈரானே முக்கியக் காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டிவருகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதால், ஈரானின் கூட்டாளி நாடான இராக்கிலுள்ள கூடுதல் தூதரக அதிகாரிகளை நாட்டுக்குத் திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
தூதரகம் தாக்குதல்: இதையடுத்து, இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள அரசுக் கட்டடங்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "ஈரான் போரிட விரும்பினால், அதுவே அந்நாட்டின் அழிவாக இருக்கும். 
அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துமாறு அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்து வருவதாகவும், மற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஆலோசனைக் கூட்டம்: முன்னதாக, பாரசீக வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண நிலையை எதிர்கொள்ளும்வகையில், மெக்கா நகரில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தருமாறு பிராந்திய நாடுகளுக்கு சவூதி அரேபியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தது. இதற்குப் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 
இதனிடையே, ஈரான், வெனிசூலா நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும்பொருட்டு, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டம் சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உலக நாடுகளுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

மிரட்டலால் ஈரானை ஒன்றும் செய்துவிட முடியாது: வெளியுறவு அமைச்சர்

அமெரிக்காவின் மிரட்டலால் ஈரானை ஒன்றும்செய்துவிட முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
"ஈரான் போரிட விரும்பினால், அதுவே அந்நாட்டின் அழிவாக இருக்கும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஷரீஃப் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, ஜாவத் ஷரீஃப் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஈரானுடன் போரிட்டவர்கள் எல்லாம் அழிந்துவிட்டனர்; ஈரானிய மக்கள் அனைத்தையும் எதிர்கொண்டுள்ளனர். பொருளாதார அடிப்படையிலான அச்சுறுத்தலும், படுகொலை மிரட்டலும் ஈரானை ஒன்றும்செய்துவிட முடியாது. ஈரானியர்களை அச்சுறுத்த முயற்சிக்க வேண்டாம்; மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்லமுறையில் வேலைசெய்யும்' என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com