இந்தியத் தேர்தல் நேர்மைத்தன்மை நிறைந்தது: அமெரிக்கா பாராட்டு

இந்தியத் தேர்தல் நடைமுறைகள் நேர்மைத்தன்மை நிறைந்தது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி
இந்தியத் தேர்தல் நேர்மைத்தன்மை நிறைந்தது: அமெரிக்கா பாராட்டு

இந்தியத் தேர்தல் நடைமுறைகள் நேர்மைத்தன்மை நிறைந்தது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. 
இது தொடர்பாக, அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஒர்டாகுஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியத் தேர்தல் நடைமுறைகள் நேர்மைத்தன்மை நிறைந்தது. அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மற்ற நாடுகளில் தேர்தல் நடைபெறும்போது, அங்குத் தேர்தல் பார்வையாளர்களை அமெரிக்கா அனுப்புவது வழக்கம். ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரத்துடனும், வெளிப்படையுடனும் செயல்பட்டு வருவதால், இந்தியாவுக்கு சிறப்புப் பார்வையாளர்களை அமெரிக்கா அனுப்புவதற்கு அவசியமில்லை. 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் அமைதியுடன் நடந்து முடிந்துள்ளது பெரும் ஆச்சரியமளிக்கிறது. இதற்காக இந்தியாவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் அமெரிக்கா நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவும் இதைப் பலமுறை உறுதிபடுத்தியுள்ளார். தற்போது வெற்றி பெற்றுள்ள அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பெரும் சவால்: இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ரிச்சர்ட் எம். ரூúஸா கூறுகையில், ""அமெரிக்காவுடனான நல்லுறவைத் தொடரும் விவகாரம், இந்தியாவில் அடுத்து பதவியேற்க உள்ள அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகச் சண்டையில் தீர்வுகாண வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 
ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமெரிக்கப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகமாக விதித்துவந்தது. அடுத்து பொறுப்பேற்கும் அரசு இந்த விவகாரத்தில் முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அப்படி ஏற்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com