பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் முதல் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வாழ்த்து செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் முதல் வாழ்த்து

மக்களவைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வாழ்த்து செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இதுகுறித்து ஹீப்ரு மற்றும் ஹிந்தி மொழியில் நெதன்யாகு வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் கவரும் வகையிலான வெற்றியைப் பெற்ற   அருமை நண்பர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழிநடத்திச் செல்ல மோடியே தகுதியானவர் என இந்த தேர்தலின் மூலம் மக்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் மீண்டுமொருமுறை தீர்ப்பு வழங்கியுள்ளனர். மோடியின் வலிமையான தோழமையில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு புதிய உச்சங்களை எட்டும் என்று அந்த சுட்டுரைச் செய்தியில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைவர்கள் வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்கட்சி தலைவர் ராஜபக்சே ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கை அதிபர் சிறீசேனா வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில், "மக்களவை தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் உங்களின் தலைமையை ஏற்க இந்த தேர்தல் மூலம் மக்கள் தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.
ஷி ஜின்பிங்: பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இருதரப்பு உறவும் புதிய உயரங்களை எட்டுவதற்கு அவருடன் இணைந்து பணியாற்ற உறுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதின்: ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 
"மோடி மீண்டும் பிரதமராகியுள்ளதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான நூற்றாண்டுகால நட்பு மேலும் வலுப்பெறுவதுடன் அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.
ஹசீனா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,"இந்தியாவில் நடைபெற்ற 17-ஆவது மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ள மோடிக்கு, வங்க தேச அரசு மற்றும் பொதுமக்கள் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் மீது மக்கள் வைத்துள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. வங்க தேசத்தின் மிகச் சிறந்த நட்பு நாடு என்பதற்கு இந்தியா எப்போதுமே எடுத்துக்காட்டாக உள்ளது. உங்களது தலைமையில் நேபாளத்தின் உறவு இன்னும் புதிய உயரங்களைத் தொடும். மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.    
நேபாள பிரதமர் வாழ்த்து: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "2019 மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்' என்று ஒலி தெரிவித்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com