ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா
ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தகத்தை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
அதனை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. ஏற்கெனவே, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையை சந்தித்து வரும் இந்தியாவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியது. ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைவிட முடியாது என்றும், அதை வழக்கம்போல தொடரப் போவதாகவும் இந்தியா அறிவித்தது.
அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தது. மற்றொரு புறம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என அறிவித்தன.  இத்தகைய சூழலில்,  ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில், இந்த காலக்கெடு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
ஏற்கெனவே அறிவித்த 6 மாதகால விலக்கை நீடிக்கப் போவதில்லை என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்தார். இதனால் இந்தியா வேறு வழியின்றி ஈரானுடன் இருந்த எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டியதாயிற்று.
இந்நிலையில், வாஷிங்டனில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்ஷ்வர்த்தன் இது தொடர்பாக கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் முதலே எண்ணெய் தேவைக்காக ஈரானைச் சார்ந்து இருப்பதை இந்தியா குறைக்கத் தொடங்கியது. அப்போது 2.5 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து 1 மில்லியன் டன் என்ற அளவிலேயே ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதேபோல வெனிசூலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை. அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா மீண்டும் விலக்கு அளிக்காது என்று தெரிந்த உடனேயே அதற்கான மாற்று வழிகளை இந்தியா கடைப்பிடிக்கத் தொடங்கியது. இது இந்திய-அமெரிக்க உறவின் நலன் சார்ந்தது.
பொருளாதாரத் தடையால் ஈரானில் இந்தியா மேற்கொண்டு வரும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏனெனில், இது ஆப்கானிஸ்தானுக்கும் அதிக பயனளிக்கக் கூடியது என்றார் அவர்.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்ஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். மேலும், இந்தியா இனி பாகிஸ்தானை அணுகாமல் ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கான முடிவு, கடந்த 2003-ஆம் ஆண்டே எடுக்கப்பட்டது. எனினும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளின் காரணமாக அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை, கடந்த 2016 ஜனவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அகற்றினார். இதையடுத்து, சாப்ஹார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா-ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com