பிரெக்ஸிட் இழுபறி எதிரொலி...: பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜிநாமா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ராஜிநாமா முடிவை கண்ணீருடன் தெரிவிக்கும் பிரதமர் தெரசா மே.
ராஜிநாமா முடிவை கண்ணீருடன் தெரிவிக்கும் பிரதமர் தெரசா மே.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு குறித்து ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாததால் அவர் தனது பதவியை அடுத்த மாதம் 7-ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை உருக்கமாகக் கூறியதாவது:
பிரதமர் பதவியிலிருந்து அடுத்த மாதம் 7-ஆம் தேதி விலக முடிவு செய்துள்ளேன். எனது வாழ்வின் மிக கெளரவம் மிக்க இந்தப் பதவியை விட்டு விலகுவதில் எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை; மாறாக, நான் மிகவும் நேசிக்கும் தேசத்துக்கு சேவையளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமைமையுடன் விலகுகிறேன்.
எனது ராஜிநாமாவுக்குப் பிறகு, அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்கும் வரை இடைக்காலப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பேன்.
எனது பதவிக் காலத்தின்போது, நிதிப் பற்றாக்குறையை சமாளித்தது, வேலைவாய்ப்பின்மையைக் குறைத்தது, மனநல மருத்துவத்துக்கு அதிக நிதி ஒதுக்கியது போன்ற பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், பிரெக்ஸிட் நடவடிக்கையை நிறைவேற்ற முடியாததுதான் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக எவ்வளவோ முயன்றேன். எனினும், மூன்று முறை அந்த மசோதாவை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.
எனக்குப் பிறகு பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமராவது, பொதுவாக்கெடுப்பில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி பிரெக்ஸிட் நிறைவேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டுமென்றால், அதுதொடர்பான ஒப்பந்தத்துக்கு என்னால் பெற முடியாத நாடாளுமன்ற ஒப்புதலை, புதிய பிரதமர் பெற்றாக வேண்டும் என்றார் தெரசா மே.
பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கு எதிராக பிரசாரம் செய்த அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரசா மே 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார்.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்குமான வர்த்தக உறவு குறித்து அவர் அந்த அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3 முறை நிராகரிக்கப்பட்டது.
மேலும், அந்த ஒப்பந்தத்தின் புதிய திருத்தங்களுக்கும் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரச மே உறுதியாகச் செயல்படவில்லை என்று ஆளும் கன்சர்வேடிவ்  கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். 
இந்த விவகாரத்தில் தெரசா மே அமைச்சரவையிலிருந்து இதுவரை அவர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடியும் அதிமானது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் பதவி விலகினர்.
இந்தச் சூழலில், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தெரசா மே வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com