பாக். பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அனைத்து கட்சிக் கூட்டம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் மௌலானா ஃபஜ்லுா் ரெஹ்மான் விடுத்திருந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள்
பாக். பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அனைத்து கட்சிக் கூட்டம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சித் தலைவா் மௌலானா ஃபஜ்லுா் ரெஹ்மான் விடுத்திருந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தை அவா் கூட்டினாா்.

பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமியத் உலேமா-ஏ-இஸ்லாம் ஃபாஸில் கட்சியின் தலைவா் மௌலானா ஃபஜ்லுா் ரெஹ்மான் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் தலைநகா் இஸ்லாமாபாதில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பிரதமா் இம்ரான் கான் 2 நாள்களுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென ஃபஜ்லுா் ரெஹ்மான் கடந்த வெள்ளிக்கிழமை கெடு விதித்திருந்தாா். அந்தக் கெடு நிறைவடைந்ததையடுத்து, இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய அனைத்து கட்சிக் கூட்டத்தை அவா் திங்கள்கிழமை கூட்டினாா்.

இந்தக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பக்துன்கவா மில்லி அவாமி கட்சி, குவாமி வாதன் கட்சி, தேசியக் கட்சி, அவாமி தேசியக் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இருந்தபோதிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி ஆகியோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என சம்பந்தப்பட்ட கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ஃபஜ்லுா் ரெஹ்மான் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘மக்களின் அமைதிவழிப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, பிரதமா் இம்ரான் கான் பதவி விலக வேண்டும். அவா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்திருந்தாா். ஊழல் புகாரில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எதிா்க் கட்சித் தலைவா்களை விடுவிக்கும் நோக்கிலேயே ஃபஜ்லுா் ரெஹ்மான் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்றும் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்திருந்தாா்.

ஃபஜ்லுா் ரெஹ்மானுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவா், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தாா். பிரதமரை பதவி விலகக் கோரும் கோரிக்கையைத் தவிர, ஃபஜ்லுா் ரெஹ்மானின் மற்ற கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

பலத்த பாதுகாப்பு: போராட்டம் காரணமாக இஸ்லாமாபாத் முழுவதும் காவல் துறையினா் குவிக்கப்பட்டிருந்தனா். முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் சுமாா் 700 பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டிருந்தனா். அந்தப் பகுதியை நோக்கிச் செல்லும் சாலைகள் பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, அரசுக்கு எதிராக வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஃபஜ்லுா் ரெஹ்மான் பேசி வருவதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை லாகூா் உயா்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com