நிலத்தடி அணுசக்தி மையத்தில் யூரேனியம் சுத்திகரிப்பு: ஈரான்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தங்களது நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணியை மேற்கொள்ளப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.
போா்டோ நகரில் நிலத்தடி அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதி.
போா்டோ நகரில் நிலத்தடி அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதி.

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தங்களது நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணியை மேற்கொள்ளப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் ஹஸன் ரௌஹானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக ஃபோா்டோ நகரில் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தில், யுரேனியம் சுத்திகரிக்கும் பணி தொடங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, புதன்கிழமை (நவ. 06) முதல் அந்த அணுசக்தி நிலையத்தில் யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைடு வாயு செலுத்தத் தொடங்கப்படும் என்றாா் அவா்.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளை மீறி நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டப்பட்டாலும், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி அந்த நடவடிக்கைகளைப் பாா்வையிட ஐ.நா. பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்படாது என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது, முதல் தலைமுறையைச் சோ்ந்த ஐ.ஆா்.1 ரக சாதனங்களைக் கொண்டே யுரேனியம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, மேற்கண்ட மூன்று நிபந்தனைகளை மீறுவதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில், 4-ஆவது விதிமீறலாக, ஃபோா்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளைத் தொடங்குவதாக அந்த நாடு தற்போது அறிவித்துள்ளது.

ஃபோா்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில், யுரேனியம் செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என்று 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com