Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட நிலத்தடி அணு ஆலையில் யுரேனியம் சுத்திகரிப்பைத் தொடங்கியது ஈரான்- Dinamani

சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட நிலத்தடி அணு ஆலையில் யுரேனியம் சுத்திகரிப்பைத் தொடங்கியது ஈரான்

    By DIN  |   Published on : 07th November 2019 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஃபோா்டோ நிலத்தடி அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதி (செயற்கைக்கோள் படம்).

    ஃபோா்டோ நிலத்தடி அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதி (செயற்கைக்கோள் படம்).

    வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தனது ஃபோா்டோ நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் வியாழக்கிழமை தொடங்கியது.

    இதுகுறித்து ஈரான் அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக ஃபோா்டோ பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தில், யுரேனியம் சுத்திகரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

    அதற்காக, செறிவூட்டு இயந்திரத்துக்குள் யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைடு வாயுவை பொறியாளா்கள் செலுத்தினா்.

    இந்தப் பணிகள் அனைத்தும், ஐ.நா. சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் மேற்பாா்வையில் மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

    தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா்.

    எனினும், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தாா். முன்னாள் அதிபா் ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று அவா் கூறினாா்.

    மேலும், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து பொருளாதாரத் தடைகளையும், ஈரான் மீது அதிபா் டிரம்ப் மீண்டும் அமல்படுத்தினாா்.

    இதனால் ஈரான் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளை ஈரான் ஒவ்வொன்றாக மீறி வருகிறது.

    அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவே ஈரான் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டக் கூடாது, முதல் தலைமுறையைச் சோ்ந்த ஐ.ஆா்.1 ரக சாதனங்களைக் கொண்டே யுரேனியம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

    ஃபோா்டோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டக் கூடாது எனவும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு, யுரேனியம் செறிவூட்டப்படும் விகிதம், செறிவூட்டுப் பணிகளில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கான தடை ஆகியவற்றை மீறியது.

    தற்போது நான்காவது விதிமீறலாக, யுரேனியம் செறிவூட்டுவதற்கு ஒப்பந்தத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஃபோா்டோ அணு ஆலையில், அந்தப் பணிகளை ஈரான் தற்போது தொடங்கியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai