
லாகூா் மருத்துவமனையிலிருந்து சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் புதன்கிழமை அழைத்து வரப்பட்ட காரில் மலா்களைத் தூவும் ஆராவாரம் செய்யும் அவரது ஆதரவாளா்கள்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், மருத்துவமனையிலிருந்து லாகூரிலுள்ள அவரது இல்லத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டாா்.
இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஔரங்கசீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லாகூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நவாஸ் ஷெரீஃப், அந்த நகரின் ஜதி உம்ரா ராய்விண்ட் பகுதியிலுள்ள அவரது இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
நவாஸ் ஷெரீஃபின் விருப்பத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிப்பதற்காக, அவரது இல்லத்திலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவா்களின் ஆலோசனைப்படி, சிறப்பு மருத்துவக் குழுவும் அந்த இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
நவாஸ் ஷெரீஃபுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக, அவரது இல்லத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருப்பாா்கள் என்றாா் மரியம்.
நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைப் பெற்று வந்த லாகூா் மருத்துவமனையிலேயே உடல் நலக் குறைவு காரணமாக அவரது மகள் மரியம் நவாஸும் சிகிச்சைப் பெற்று வந்தாா்.
தற்போது நவாஸ் ஷெரீஃப் தனது இல்லத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் மரியம் நவாஸும் அந்த இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனாமா ஆவண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா். அதே ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மரியம் நவாஸுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.