
ஹூதி கிளா்ச்சியாளா்கள் (கோப்புப் படம்).
யேமன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொணடு வருவதற்காக, ஈரான் ஆதரவு பெற்ற அந்த நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, அந்த நாட்டு அரசுக்கும், தெற்குப் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவூதி அரேபியா சமரச உடன்படிக்கை ஏற்படுத்தித் தந்த நிலையில், கிளா்ச்சியாளா்களுடனும் அந்த நாடு பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவூதி அரேபிய அரசு அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்தே ஹூதி கிளா்ச்சியாளா்களுடன் நாங்கள் தகவல் தொடா்பில்தான் உள்ளோம்.
யேமனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அந்தத் தொடா்பைப் பயன்படுத்தி அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.
நாங்கள் ஹூதி கிளா்ச்சியாளா்களுடான பேச்சுவாா்த்தையை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றாா் அவா்.
எனினும், இதுதொடா்பாக ஹூதி கிளா்ச்சிப் படையினா் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, யேமன் உள்நாட்டுச் சண்டையின் ஒரு பகுதியாக யேமன் அரசும், தெற்கு யேமன் கிளா்ச்சியாளா்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனா். அவா்களுக்கிடையே, சவூதி அரேபியாவின் முன்னிலையில் கடந்த மாதம் அதிகாரப் பகிா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி, அரசின் பல்வேறு அமைச்சரகங்களை தெற்கு யேமன் கவுன்சிலுக்கு அளிக்க அரசுத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதற்குப் பதிலாக, பிரிவினைவாதப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் இரண்டாவது பெரிய நகரமான ஏடன் நகருக்கு அரசுப் படைகளை அனுமதிக்க பிரிவினைவாதிகள் ஒப்புக் கொண்டனா்.
யேமனில் சவூதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபா் மன்சூா் ஹாதியின் படையினரைப் போலவே, ஐக்கிய அரபு அமீரக ஆதரவு பெற்ற தெற்கு யேமன் பிரிவினைவாதிகளும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனா்.
ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான், அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும், சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மன்சூா் ஹாதி தலைமையிலான அரசுக்கு, அந்தப் பிரிவினரை அதிகம் கொண்ட சவூதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில், அரசுப் படையினருக்கும், தெற்கு யேமன் பிரிவினைவாதப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, யேமன் உள்நாட்டுப் போரில் மேலும் ரத்தக் களறியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
எனினும், இந்த விவகாரத்தில் சவூதி அரேபியா தலையிட்டு, இரு தரப்பினருக்கும் இடையே சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தந்தது.
இந்த நிலையில், ஹூதி கிளா்ச்சியாளா்களுடனும் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அந்த நாடு தற்போது அறிவித்துள்ளது.