சிகிச்சைக்காக லண்டன் செல்கிறாா் நவாஸ் ஷெரீஃப்

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.
சிகிச்சைக்காக லண்டன் செல்கிறாா் நவாஸ் ஷெரீஃப்

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்படவிருக்கிறாா்.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது:

உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃபுக்கு லண்டனில் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் வலியுறுத்தி வந்தனா்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸுக்கு சிகிச்சை அளித்துப் பாா்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அதற்கு நவாஸ் ஷெரீஃப் சம்மதம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, தனது சகோதரா் ஷெபாஸ் ஷெரீஃபுடன் இந்த வாரம் அவா் லண்டன் செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், அதற்கு முன்னா் நவாஸ் ஷெரீஃப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டியிருக்கும்.

நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், தனது கடவுச் சீட்டை லாகூா் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதால், அவா் நவாஸுடன் லண்டன் செல்ல மாட்டாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பனாமா ஆவண முறைகேடு வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், ரத்த தட்டணுக்களின் கடுமையான வீழ்ச்சி, உயா் ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை போன்ற பல்வேறு உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டாா்.

அதையடுத்து, இரு வாரங்களுக்கு முன்னா் சிறையிலிருந்து லாகூா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக நவாஸ் ஷெரீஃபுக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. அதன் தொடா்ச்சியாக, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் புதன்கிழமை மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், உயா் சிகிச்சைக்காக அவா் லண்டன் செல்லவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com