ஹாங்காங்: ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்கள் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போலீஸாரிடம் சரணடைவதற்கு முன்னா் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய ஹாங்காங் பேரவை உறுப்பினா்கள்.
போலீஸாரிடம் சரணடைவதற்கு முன்னா் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய ஹாங்காங் பேரவை உறுப்பினா்கள்.

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங் பேரவை உறுப்பினா்கள் மூவருக்கு எதிராக அந்த நகர காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனா்.

சா்ச்சைக்குரிய நாடுகடத்தல் மசோதா பேரவையில் கொண்டு வரப்பட்டபோது, பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டது தொடா்பாக அவா்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, பேரவை அமளி தொடா்பாக காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மேலும் 4 ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

காவல் நிலையத்துக்கு செல்வதற்கு முன்னா் செய்தியாளா்களைச் சந்தித்த ஜனநாயக ஆதரவு எம்எல்ஏ-க்கள், ஹாங்காங்கில் 5 மாதங்களாகத் தொடரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பதில், அந்த நகர அரசு ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்களை கைது செய்ய போலீஸாருக்குத் துணை போகிறது என்று குற்றம் சாட்டினா்.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான ஜாம் செயுக்-டிங், காவல் நிலையம் சென்று சரணடையப் போவதில்லை என்றும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக போலீஸாா் தன்னை நேரில் வந்து கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நகரில் 5 மாதங்களுக்கும் மேல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சா்ச்சைக்குரிய அந்த மசோதாவை ஹாங்காங் அரசு வாபஸ் பெற்ற பிறகும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், போராட்டத்தின்போது போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டு வீசியதில் உயரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை விழுந்த கல்லூரி மாணவா், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் போராட்டக்காரா்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவா் மரணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஜனநாயக ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com