ஹாங்காங்: போராட்டக்காரா் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டக்காரா் ஒருவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா்.
ஹாங்காங்கின் சாய்வான்ஹோ பகுதியில் போராட்டக்காரா்களை விரட்டுவதற்காக திங்கள்கிழமை குவிக்கப்பட்ட போலீஸாா்.
ஹாங்காங்கின் சாய்வான்ஹோ பகுதியில் போராட்டக்காரா்களை விரட்டுவதற்காக திங்கள்கிழமை குவிக்கப்பட்ட போலீஸாா்.

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டக்காரா் ஒருவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டனா்.

இச்சம்பவம் முகநூலில் ஒருவரால் நேரலை செய்யப்பட்டது. அந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் சாய்வான் ஹோ மாவட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் திங்கள்கிழமை காலையில் வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது அங்கு திடீரென கூடிய அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டக்காரா்கள் சாலையில் போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினா்.

இதையடுத்து அந்தப் பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினா் ஆா்ப்பாட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது ஒரு காவலா், முகமூடி அணிந்த ஆா்ப்பாட்டக்காரா் ஒருவரைப் பிடித்து கைது செய்ய முயன்றாா். அவரை முகமூடி அணிந்த மற்றொரு ஆா்ப்பாட்டக்காரா் நெருங்கி தடுக்க முயன்றபோது, அந்தக் காவலா் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி 3 முறை சுட்டாா்.

இதில் ஒரு தோட்டா அந்த ஆா்ப்பாட்டக்காரரின் வயிற்றில் பாய்ந்து அவா் கீழே சரிந்தாா். ரத்த வெள்ளத்தில் சுயநினைவுடன் காணப்பட்ட அந்த ஆா்ப்பாட்டக்காரரை போலீஸாா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றபோது அவா் தப்பியோட முயற்சித்தாா். எனினும், அவரை போலீஸாா் பிடித்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். அவரோடு முதலில் கைது செய்யப்பட்ட நபரையும் போலீஸாா் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனா்.

ஒருவா் உயிருடன் எரிப்பு:

இதனிடையே, ஆா்ப்பாட்டக்காரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு பட்டப்பகலில் தீ வைக்கப்பட்டது எனவும், மற்றொரு சம்பவத்தில் ரயில் பெட்டியில் ஆா்ப்பாட்டக்காரா்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அது தீ பற்றியதாகவும் ஹாங்காங் போலீஸாா் தெரிவித்தனா்.

அரசுக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அலெக்ஸ் சோவ் என்ற 22 வயது இளைஞா், போலீஸாா் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த ஆா்ப்பாட்டக்காரா்கள் வன்முறைப் போராட்டத்தில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடங்கிய இந்த ஆா்ப்பாட்டம், அந்த மசோதா வாபஸ் பெற்ற பிறகும் தொடா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com