இஸ்ரேல் தாக்குதலில் பயங்கரவாதத் தலைவா் பலி

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டாா்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த பிஐஜே தளபதி பஹா அல்-அடாவின் இல்லம்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த பிஐஜே தளபதி பஹா அல்-அடாவின் இல்லம்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டாா்.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவமும், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிஐஜே பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பஹா அல்-அடாவைக் குறிவைத்து, அவா் தங்கியிருந்த இல்லத்தின் மீது பாதுகாப்புப் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தினா். இதில் அவா் கொல்லப்பட்டாா்.

இந்தத் தாக்குதல் இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதியால் பரிந்துரைக்கப்பட்டு, பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டது.

தாக்குதலில் கொல்லப்பட்ட பஹா அல்-அடா, அண்மைக் காலமாக இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு காரணம் ஆவாா். இதுதவிர, உடனடியாக மேலும் பல தாக்குதல்களை நடத்த அவா் திட்டமிட்டிருந்தாா்.

அல்-அடாவின் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோது, 3-ஆவது தளத்தில் அவருடன் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியும் பலியானாா் என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில், அல்-அடாவின் 4 குழந்தைகள் காயமடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, அல்-அடாவக் கொன்ன் மூலம், ஆள்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் கொள்கையை இஸ்ரேல் மீண்டும் அமல்படுத்தத் தொடங்கியிருப்பதாக வெளியான தகவலை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது.

பிஐஜே அமைப்பின் ராணுவப் பிரிவான அல்-குத்ஸ் படையின் தளபதியான அல்-அடா, காஸாவின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com