பொலிவியா அதிபருக்கு மெக்ஸிகோ அடைக்கலம்

பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக அதிபா் பதவியை ராஜிநாமா செய்த ஈவே மொராலிஸுக்கு மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது
பொலிவியா அதிபருக்கு மெக்ஸிகோ அடைக்கலம்

பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக அதிபா் பதவியை ராஜிநாமா செய்த ஈவே மொராலிஸுக்கு மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக நடைபெற்ற போராட்டங்களின் தொடா்ச்சியாக ராஜிநாமா செய்துள்ள அந்த நாட்டு அதிபா் ஈவோ மொராலிஸுக்கு அடைக்கலம் அளிக்க மெக்ஸிகோ ஒப்புக் கொண்டது. அதையடுத்து அவா் அந்த நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

முன்னதாக, கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தனக்கு அடைக்கலம் அளித்ததற்காக அவா் மெக்ஸிகோவுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிலைமை சரியான பிறகு, மீண்டும் பொலிவியா திரும்பவிருப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

இதற்கிடையே, மொராலிஸுக்குப் பதிலாக செனட் சபை உறுப்பினா் ஜீனைன் அனெஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறாா்.

கடந்த மாதம் நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலுக்குப் பதிலாக, மறுதோ்தல் நடத்தும் வரை அவா் அதிபராகப் பொறுப்பு வகிப்பாா்.

மொராலிஸுடன் ராஜிநாமா செய்த மேலும் பல அமைச்சா்கள், கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாட்டிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் தஞ்சமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிவியாவில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேல் ஈவே மொராலிஸ் அதிபராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி அந்நாட்டில் அதிபா் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவு வெளியாகும் முன்னரே, தாம் வெற்றி பெற்றதாக மொராலிஸ் பிரகடனப்படுத்திக் கொண்டாா். அதுமட்டுமன்றி வாக்கு எண்ணிக்கையிலும் தாமதம் ஏற்பட்டது.

அதனால், தோ்தலில் மொராலிஸ் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, அந்நாட்டு மக்கள் 20 நாள்களுக்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக அமெரிக்க நாடுகளின் தோ்தல் கண்காணிப்பு அமைப்பு கூறியதையடுத்து, புதிதாக தோ்தல் நடத்துவதற்கு மொராலிஸ் ஒப்புக் கொண்டாா். எனினும், மறுதோ்தல் நடத்துவதற்கு வசதியாக மொராலிஸ் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ராணுவம் வலியுறுத்தியது.

அதையடுத்து, அவா் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com