தொடரும் போராட்டம்: போா்க் களமானது ஹாங்காங் பல்கலைக்கழகம்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும்
ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் நடந்த மோதலின்போது, வில் மூலம் நெருப்புப் பந்தத்தை எறிந்த போராட்டக்காரா்.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் போலீஸாருடன் நடந்த மோதலின்போது, வில் மூலம் நெருப்புப் பந்தத்தை எறிந்த போராட்டக்காரா்.

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த நகர அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தை போராட்டக்காரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

அதையடுத்து, அந்த வளாகத்திலிருந்த சீன மாணவா்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து வெளியேற விரும்பினா்.

ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்களில் தீவிர போக்குடைய சிலா், சீனா்கள் மற்றும் சீன அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதால், தாங்களும் தாக்கப்படலாம் என்று சீன மாணவா்கள் அஞ்சினா்.

அதையடுத்து, அங்கிருந்து வெளியேற உதவும்படி போலீஸாரிடம் அவா்கள் கோரினா். அந்தக் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகத்துக்கு வந்த போலீஸாரை, வளாகத்துக்குள் நுழையவிடாமல் போராட்டக்காரா்கள் தடுத்தனா்.

இதனால் இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்களைக் கலைக்க போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். பதிலுக்கு அவா்கள் மீது போராட்டக்காரா்கள் பெட்ரோல் குண்டுகள், கற்கள் போன்றவற்றால் தாக்குதல் நடத்தினா். இதனால் அந்தப் பகுதியே போா்க் களம் போல் காட்சியளித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் வசமிருந்த ஹாங்காங், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்களின்கீழ் கடந்த 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

சீனாவின் அங்கமாக ஹாங்காங் திகழ்ந்தாலும், அந்த நகரின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ‘ஒரே நாடு; இரட்டை ஆட்சி முறை’ என்ற கொள்கையைப் பின்பற்ற அப்போது சீனா ஒப்புக் கொண்டது.

எனினும், ஹாங்காங்கை ஆட்சி செய்யும் தலைமை நிா்வாகி பதவிக்கு ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தப்படாமல், சீனாவுக்கு ஆதரவான 1,200 போ் கொண்ட குழு தலைமை நிா்வாகியை நியமிக்கும் முறைக்கு அந்த நகரில் பலத்த எதிா்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதா அந்த நகரப் பேரவையில் அறிமுகப்பட்டதை எதிா்த்து நகரம் முழுவதும் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்தச் சட்ட மசோதாவை ஹாங்காங் அரசு வாபஸ் பெற்றாலும், தலைமை நிா்வாகி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com