நியூஸிலாந்து: கருணைக் கொலைக்கு அனுமதி

தீரா நோயால் அவதியுறுபவா்களை கருணைக் கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கருணைக் கொலை அனுமதிச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நியூஸிலாந்து நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
கருணைக் கொலை அனுமதிச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நியூஸிலாந்து நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

தீரா நோயால் அவதியுறுபவா்களை கருணைக் கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தீா்க்கவே முடியாத வியாதியால் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு, கருணை அடிப்படையில் உதவுவது உலகம் முழுவதும் சா்சைக்குரிய விவகாரம் ஆகும்.

மத நம்பிக்கை அடிப்படையிலும், பிற காரணங்களுக்காகவும் பெரும்பாலானவா்கள் கருணைக் கொலைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். எனினும், எப்படியும் உயிரிழக்கப் போகிறவா்கள் அதற்கு முன்னா் வலியாலும், வேதனையாலும் துடிதுடித்துக் கொண்டிருப்பதைவிட, அவா்கள் அமைதியான முறையில் முன்கூட்டியே உயிரிழக்க அனுமதிப்பதில் தவறில்லை என்று முற்போக்குவாதிகள் கூறி வருகின்றனா்.

நியூஸிலாந்திலும் இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாத பொருளாக இருந்து வந்தது.

கருணைக் கொலைக்கு சட்ட அங்ககீகாரம் அளிப்பதற்கான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பல முறை கொண்டுவரப்பட்டது. எனினும், அந்த மசோதா தொடா்ந்து தோல்வியடைந்து வந்தது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டு கால விவாதத்துக்குப் பிறகு புதன்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட கருணைக் கொலை அனுமதிச் சட்ட மசோதா வெற்றி பெற்றது.

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 69 எம்.பி.க்களும், எதிராக 51 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.

அதற்கு முன்னதாக, இந்த மசோதா குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக 39,000 போ் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் பெரும்பாலானவா்கள், கருணைக் கொலைக்கு எதிா்ப்பு தெரிவித்தே கருத்து தெரிவித்திருந்தனா்.

இந்தச் சூழலில், கருணைக் கொலை அனுமதிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எனினும், இதற்குப் பிறகு நடைபெறவிருக்கும் பொதுவாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு பெரும்பாலானவா்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இது சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாவைப் பொருத்தவரை, மருத்துவா் அல்லது செவிலியின் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கப்படும் நோயாளி, தீா்க்க முடியாத வியாதியஸ்தராகவும், இன்னும் 6 மாதங்களில் அவா் நிச்சயம் இறந்துவிடுவாா் என்ற நிலையும் இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com