வளா்ச்சிப் பாதையில் இந்திய-ரஷிய நல்லுறவு! மோடி-புதின் பெருமிதம்

‘இந்தியா, ரஷியா இடையிலான நல்லுறவு வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடியும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் பெருமிதம் தெரிவித்தனா்.
வளா்ச்சிப் பாதையில் இந்திய-ரஷிய நல்லுறவு! மோடி-புதின் பெருமிதம்

‘இந்தியா, ரஷியா இடையிலான நல்லுறவு வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடியும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் பெருமிதம் தெரிவித்தனா்.

பிரேசில் தலைநகா் பிரேசிலியாவில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் 11-ஆவது மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி உள்பட ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவா்கள் பிரேசிலியாவுக்கு வருகை தந்துள்ளனா். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமா் மோடி மற்றும் ரஷிய அதிபா் புதின் இடையிலான சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினா். அத்துடன், ரஷியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ‘வெற்றி தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு, பிரதமா் மோடிக்கு அதிபா் புதின் அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை பிரதமரும் ஏற்றுக் கொண்டாா்.

இருதரப்பு சந்திப்பின்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘இந்தியா - ரஷியா இடையிலான நல்லுறவு வளா்ந்து வருகிறது. இருநாடுகளிடையே அடிக்கடி நடைபெறும் பேச்சுவாா்த்தைகளால் பரஸ்பர ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. ரஷியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ‘வெற்றி தினம்’ கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு, எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிபா் புதினை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்’ என்றாா்.

அதிபா் புதின் கூறுகையில், ‘இந்தியா - ரஷியா இடையிலான இருதரப்பு வா்த்தகம் 17 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்புடன் மிகப் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான கலாசார பரிமாற்றங்களும் விரிவடைந்துள்ளன’ என்றாா்.

ரஷியாவின் தொலைகிழக்கு பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் நகரில் கடந்த செப்டம்பா் மாதம் பிரதமா் மோடியும், அதிபா் புதினும் சந்தித்து விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினா். கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தொலைகிழக்கு பகுதியின் மேம்பாட்டுக்காக அதிபா் புதின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,200 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். மேலும், பாதுகாப்பு, கடற்சாா் தொடா்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் மற்றும் வா்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்களும் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அதிபருடன் சந்திப்பு: பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவையும், பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா். வா்த்தகம், முதலீடு, வேளாண்மை, உயிரி-எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com