சூர்ய தேவதையுடனான உணவுப் பகிர்தலுடன் முடிவுக்கு வருகிறது ஜப்பான் பேரரசரின் பட்டாபிஷேக சடங்கு!

இந்தச் சடங்கைப் பற்றிப் பேசும்போது விமர்சகர்கள் சொன்ன தகவல்களில் ஒன்று; சுமார் 1000 வருடங்களாக இந்த சடங்கு ஜப்பானில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சடங்கின் இன்றைய வடிவம் 1800 ஆம் ஆண்டுகளில் உருவானது என்
Japan-Emperor-Daijosai 2019
Japan-Emperor-Daijosai 2019

ஜப்பானிய பேரரசராக கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிசூட்டப்பட்டார் நருஹிட்டோ. முடிசூடுவதுடன் முடிந்துவிடவில்லை அவரது பட்டாபிஷேகச் சடங்குகள். ஜப்பானிய அரச குடும்பங்களைப் பொறுத்தவரை அவர்கள் முடிசூட்டல் முடிந்த பின்னரும கூட ஆண்டு முழுவதும் அதற்கான சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதோ நேற்று இரவில் தொடங்கிய சூர்ய தேவதைக்கான சடங்குடன் ஒருவழியாக பட்டாபிஷேகச் சடங்குகள் முடிவுக்கு வருமென்று கூறப்பட்டிருக்கிறது.

டைசோஜாய் என்று சொல்லப்படக்கூடிய இந்த சடங்கானது சூர்ய தேவதையான அமதரேசு ஒமிகாமியை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி மாமன்னர் ஒரு இரவு முழுவதும் டைசோஜாய் என்று சொல்லப்படக்கூடிய விருந்தை மரத்தாலான இருட்டறையில் தங்கி சூர்ய தேவதையுடன் பகிர்ந்துகொள்வார். அத்துடன் சூர்ய தேவதைக்கான பூஜைகளும் அப்போது நடக்கும் என்று கூறப்படுகிறது. இதை நாட்டில் கிறிஸ்தவ மத அமைப்புகளும், கம்யூனிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள். அரசு சார்பாக இந்த சடங்குக்காக 2.7 பில்லியன் ஜப்பானிய யென்கள் ($25 மில்லியன்) இதற்காக செலவிடப்படுகின்றன. இவ்வளவு பெரும் தொகையில் இப்படியொரு மதச்சடங்கு தேவையா? எனப்து அவர்களது கேள்வி.

ஜப்பானில் மன்னராக பதவியேற்றுக்கொள்பவர்களுக்கு தேவதைகளுடன் ரகசியத் தொடர்பு உண்டு என்று அந்நாட்டு மக்களால் ஒருகாலத்தில் நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை முன் வைத்து இரண்டாம் உலகப்போருக்கு முன் பாடப்புத்தகங்களில் எல்லாம்கூட அன்றைய ஜப்பான் பேரரசரான ஹிரோஹிட்டோவுக்கு இருக்கும் தெய்வீக உறவைப் பற்றி பாடங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் தோல்வியைத் தழுவியதும் மன்னரின் தெய்வீக சக்தி குறித்த நம்பிக்கை மக்களிடமிருந்து நழுவியது. அத்தகைய பாடங்களும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டன.

இப்படியெல்லாம் சர்ச்சைகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபுறத்தில்;

இந்தச் சடங்கை எதிர்க்கத் தேவையில்லை. இது நாடு முழுவதும் பின்பற்றப்படும் உணவை தெய்வத்துடன் பகிர்வதற்கான ஒரு சடங்கு மாத்திரமே! இதை நிறைவேற்றுவதன் மூலமாக வெற்றிகரமாக புதிய மன்னரின் பட்டாபிஷேகச் சடங்கு நிறைவுபெறுகிறது என கியோட்டோவின் ஜப்பானிய ஆய்வுகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஜான் ப்ரீன் கூறுகிறார்.

வியாழன் அன்று இரவு 7 மணியளவில் பேரரசர் முழுவதும் வெண்மை நிறத்தாலான நாடாக்கள் நிறைந்த ஒரு அங்கியை அணிந்துகொண்டு டார்ச் லைட் உதவியுடன் மரத்தாலான இருண்ட மாளிகையொன்றில் நுழைந்தார். அவர் நுழைந்ததுமே அங்கிருந்த கர்ட்டன் மூடிக்கொண்டது.

பேரரசருடன், பேரரசியும் நீண்ட ரயில் போன்ற அங்கியுடன் அந்த நிகழ்வின் தொடக்கத்தில் தென்பட்டாலும்கூட அரசி, அரசருடன் அந்த மரமாளிகைக்குள் நுழையவில்லை.

அந்த இருண்ட மாளிகை அறையினுள் வழிந்தோடும் மிக மெல்லிய வெளிச்சத்தில் பேரரசர் முழந்தாளிட்டு சூர்ய தேவதைக்கான வழிபாடுகளைத் தொடங்குகிறார். சூர்ய தேவதைக்கு 32 தட்டுக்களில் உணவு பரிமாறப்பட்டு படைக்கப்பட்டு ஜப்பானின் அமைதிக்கான கோரிக்கையை முன் வைக்கிறார் மன்னர்.

மன்னரும், தேவதையும் அரிசி, சோளம், அரிசியினால் தயாரிக்கப்பட்ட ஒயின் என சில பிரத்யேக உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு உண்பதான சடங்கு கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களில் முடிந்ததும் மீண்டும் அந்த மாளிகையில் இருக்கும் பிற அறைகளிலும் இதேவிதமான பகிர்தல்கள் மேற்கொள்ளப்படும். இப்படியாக இந்தச் சடங்கு முடிய வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி ஆகலாம் என்று கூறப்பட்டது.

இந்தச் சடங்கைப் பற்றிப் பேசும்போது விமர்சகர்கள் சொன்ன தகவல்களில் ஒன்று; சுமார் 1000 வருடங்களாக இந்த சடங்கு ஜப்பானில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சடங்கின் இன்றைய வடிவம் 1800-ஆம் ஆண்டுகளில் உருவானது என்றும் தெரிவித்தார்கள். உணவைப் பகிர்ந்துகொள்ளும் சடங்கானது மன்னரை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அதிகார மையங்கள் நினைத்தன. அதன்படி மன்னரை மையமாகக் கொண்டு நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சிகளில் ஒன்றே இது என்றனர்.

எல்லாம் சரிதான், ஆனால், மன்னர் குடும்பத்திற்கான சடங்கை நிறைவேற்ற அவர்களது குடும்ப நிதியிலிருந்துதானே பணம் பெறப்பட்டிருக்க வேண்டும். ஏன் மக்கள் பணத்தை எடுத்து மன்னர் குடும்பத்தினருக்குச் செலவழிக்க வேண்டும் என்கிறார் 60 வயது கொய்சி ஷின். இவரது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாமலில்லை. அடுத்த மன்னரும் பட்டத்து இளவரசருமான அகிஷினோகூட இதேவிதமான கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார். அவரென்ன கூறியிருக்கிறார் என்றால், இம்மாதிரியான சிறு சடங்குகளை நிறைவேற்ற மன்னர் குடும்பத்து நிதியையே பயன்படுத்தலாமே! எதற்கு மக்கள் பணத்தை பயன்படுத்திக்கொண்டு என்றிருக்கிறார். ஆயினும் இந்த எதிர்ப்பானது 1990-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது தற்போது பெருமளவில் குறைந்திருக்கிறது என்பதையும் கொய்சி ஷின் ஒப்புக்கொள்கிறார். ஏனெனில், 1990-ஆம் ஆண்டில் இந்தச் சடங்கை எதிர்த்து 1,700 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால், இப்போதோ வெறும் 318 பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்

இந்த விஷயத்தில் நாங்கள் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கவில்லை. ஆனால், மதத்தையும், அரசையும் இணைப்பது நல்லதல்ல என்பதை மக்கள் மனதில் ஆழப் பதிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கான முயற்சிதான் இந்த எதிர்ப்பு என்கிறார் கொய்சி ஷின்.

சரிதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com