இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப் பதிவு

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப் பதிவு

கொழும்பு: இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்டங்களில் வாக்குப் பதிவு அதிக விறுவிறுப்புடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி வரிசையாக வந்த பேருந்துகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது போன்ற வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 35  வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலின் பூர்வாங்க முடிவுகள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வெளியாகும். இறுதி முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இலங்கை அதிபர் தேர்தலைப் பொருத்தவரை, தாங்கள் விரும்பும் வேட்பாளராக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என 3 பேரை வாக்காளர்களால் தெரிவு செய்ய முடியும். முதல் தெரிவிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அத்தகைய பெரும்பான்மையை யாரும் பெறாவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தெரிவை அடிப்படையாகக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்படும். அதைப் பொருத்து, தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com