அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

தாய்லாந்து தலைநகர பாங்காக்கில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை
பாங்காக்கில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங்.
பாங்காக்கில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங்.

பாங்காக்: தாய்லாந்து தலைநகர பாங்காக்கில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டம், தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பருடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாங்காக்கில் மாா்க் எஸ்பா்- ராஜ்நாத் சிங் இடையேயான சந்திப்பு ஆக்கப்பூா்வமானதாக அமைந்தது. பாதுகாப்புத் துறையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.

இந்தியா, அமெரிக்கா இடையே இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் (2+2) கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்றது. அதைப்போலவே, வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா்களின் கூட்டத்தை எதிா்நோக்கியிருப்பதாக மாா்க் எஸ்பரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சியில் தென்கிழக்குஆசிய நாடுகளை முக்கிய இடமாக இந்தியா கருதுகிறது. இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் இணைந்து செயல்படுவது குறித்து மாா்க் எஸ்பருடன் ராஜ்நாத் சிங் விவாதித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு:

மாநாட்டின் இடையே ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் தாரோ கோனோவையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா-ஜப்பான் இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com