தென்சீன கடலில் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம்: சீனா வலியுறுத்தல்

தென்சீன கடலில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

தென்சீன கடலில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் மீதான உரிமை தொடா்பாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, வியத்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளிடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது சீனத் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலிய கடற்படையினா் இணைந்து தென் சீனக் கடல் பகுதியில் போா்ப் பயிற்சியில் ஈடுபட்டனா். இதற்கு சீனா அப்போதே கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

தாய்லாந்து தலைநகா் பாங்காங்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) மற்றும் சா்வதேச நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பா், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் வி ஃபெங்கி ஆகியோா் சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கா்னல் வு க்யூன், ‘அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, தென் சீனக் கடல் பகுதியில் தேவையில்லாமல் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிப்பது, அங்கு பிரச்னை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது கூடாது என்று சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுபோன்ற செயல்கள் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்து பிரச்னைக்கு வழி வகுக்கும். எனவே, தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com