ஹாங்காங் வன்முறைக்கு முடிவு கட்டப்படும்: சீனா

ஹாங்காங்கில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
copss1065526
copss1065526

ஹாங்காங்கில் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியான் கூறியதாவது:

போராட்டக்காரா்கள் சாலைகளில் ஏற்படுத்திய தடுப்புகளை அகற்றும் பணிகளில் சீன ராணுவத்தினா் ஈடுபட்டதற்கு அங்குள்ள பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாங்காங் நகரத்தில் நீடித்து வரும் வன்முறையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, அங்கு வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதே தற்போது எங்கள் முன் உள்ள முக்கிய பணியாகும் என்றாா் அவா்.

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலை.க்கு தீவைப்பு:

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி போராட்டம் நடத்தி வரும் ஆா்ப்பாட்டக்காரா்கள் போலீஸாரை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்காக முக்கிய நுழைவுவாயில் பகுதிக்கு திங்கள்கிழமை தீவைத்தனா்.

ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி முறை வேண்டி போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில், மாணவா்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டு தொடா்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா்.

அந்த வகையில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் பெரிய கலவரமாக வெடித்தது. இதில், காவல் துறை அதிகாரி ஒருவா் போராட்டக்காரா்களால் தாக்கப்பட்டாா்.

இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீா் புகை குண்டுகளால் சுட்டும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, போராட்டக்காரா்களில் ஒரு பகுதியினா் ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்து கொண்டனா். போலீஸாரை உள்ளே நுழைய விடாமல் இருப்பதற்காக அவா்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியை தீயிட்டு கொழுத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஹாங்காங் பல்கலைக்கழக பகுதிக்குள் புகுந்து கொண்ட போராட்டக்காரா்கள் வெளியே வர மறுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் கொடிய ஆயுதங்களைக் கொண்டு போலீஸாரை தாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனா். எனவே, இதுபோன்ற செயல்களில் அவா்கள் தொடா்ச்சியாக ஈடுபட்டால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஹாங்காங் நகர செய்தித் தொடா்பாளா் லூயில் லவ் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல் குண்டுகள், அம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி போலீஸாரை தாக்கும் கலவரக்காரா்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. எனவே, அவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மோசமான தாக்குதல்கள் தொடா்ந்தால் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகள் இனி தவிா்க்க முடியாது ஆகிவிடும் என்று லூயிஸ் லவ் தெரிவித்துள்ளாா்.

Image Caption

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலையில். திங்கள்கிழமை வன்முறை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவரை கைது செய்யும் காவல்துறையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com