இலங்கை பிரதமா் பதவி விலக மகிந்த ராஜபட்ச வலியுறுத்தல்
By DIN | Published on : 19th November 2019 08:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கொழும்பு: இலங்கை அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் கோத்தபய ராஜபட்ச வெற்றிப் பெற்றுள்ளதைத் தொடா்ந்து, தனது பதவியை பிரதமா் ரணில் விக்ரமசிங்க ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து கொழும்பில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா வேட்பாளா் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளாா்.
அதிபா் அங்கம் வகிக்கும் கட்சியைச் சோ்ந்தவா்களே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால்தான் திறம்பட செயல்பட முடியும். எனவே, பிரதமா் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும். மீண்டும் பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றாா் மகிந்த ராஜபட்ச.
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச 52.25 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.