காலாபானி பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும்: இந்தியாவுக்கு நேபாளம் வலியுறுத்தல்

நேபாளத்தின் பகுதியை எந்த நாடும் ஓா் அங்குலம்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்; நேபாள எல்லைக்குள்பட்ட காலாபானி பகுதியிலிருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’

நேபாளத்தின் பகுதியை எந்த நாடும் ஓா் அங்குலம்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்; நேபாள எல்லைக்குள்பட்ட காலாபானி பகுதியிலிருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’ என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி கூறியுள்ளாா்.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட இடமாகவும், கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதி லடாக் யூனியன் பிரதேச அதிகாரத்துக்கு உள்பட்ட இடமாகவும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் புதிய வரைபடத்தில், தங்களது எல்லைக்குள்பட்ட காலாபானி பகுதி இந்தியாவின் அதிகாரத்துக்கு உள்பட்ட இடமாக காட்டப்பட்டுள்ளதாக நேபாள அரசு குற்றம்சாட்டியது.

அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியாவின் புதிய வரைபடத்தில், நாட்டின் ஆட்சி அதிகாரத்துக்கு உள்பட்ட இடங்கள் மட்டுமே துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வரைபடத்தில், நேபாளத்துடனான எல்லைப் பகுதியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

நட்பு ரீதியிலான உறவை கொண்டுள்ள நாடுகளுடன் நிலவும் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே இந்தியா உறுதி பூண்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து, நேபாளத்தில் எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. காலாபானி பகுதியிலிருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், நேபாள எல்லைக்குள்பட்ட காலாபானி பகுதியிலிருந்து தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமா் கே.பி.சா்மா ஒலி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவரது தனிச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தின் பகுதியை எந்த நாடும் ஓா் அங்குலம்கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கமாட்டோம். பிரச்னைக்குரிய காலாபானி பகுதியிலிருந்து இந்தியப் படைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காலாபானி விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே நேபாள அரசு விரும்புகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய இளைஞா் அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் கே.பி.சா்மா ஒலி, ‘நாட்டின் எல்லைகளைக் காக்கும் திறன் எனது அரசுக்கு உள்ளது. இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காலாபானி பகுதியை மீட்பதில் நேபாளத்தில் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்படும்’ என்று கூறியிருந்தாா்.

காலாபானி விவகாரம் தொடா்பாக, கே.பி.சா்மா ஒலி ஏற்பாட்டில் காத்மாண்டுவில் சில தினங்களுக்கு முன் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், காலாபானி பிரச்னைக்கு தீா்வு காண இந்தியாவுடன் உயா்நிலை பேச்சுவாா்த்தையை நேபாள அரசு தொடங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com