யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல: அமெரிக்கா

மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மாலே அடுமிம் பகுதியில் அமைக்க்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள்.
மேற்குக் கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மாலே அடுமிம் பகுதியில் அமைக்க்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள்.

மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன் மூலம், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அமெரிக்கா திடீரென மாற்றிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ வாஷிங்டனில் கூறியதாவது:

மேற்குக் கரையின் யூதக் குடியிருப்புகள் தொடா்பாக அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் வாதங்களை கவனமாக ஆராய்ந்தோம். அதன் முலம், அந்தக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று முடிவுக்கு வந்துள்ளோம்.

அந்தக் குடியிருப்புகளை சா்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை.

அந்த நிலைப்பாட்டால் பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதித் தீா்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தனிநபா் குடியிருப்புகளின் சட்டப்பூா்வ தன்மை குறித்து, அந்தந்த பகுதி சூழலை அடிப்படையாகக் கொண்டே முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, மேற்குக் கரை யூதா் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற முன்னாள் அதிபா் ஒபாமா ஆட்சிக் காலத்து நிலைப்பாட்டை தற்போதைய அரசு மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசுகளின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

கடந்த 1978-ஆம் ஆண்டில் மேற்குக் கரை யூதக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று அப்போதைய ஜிம்மி காா்ட்டா் அரசு தெரிவித்தது. எனினும், அந்த நிலைப்பாட்டை ரொனால்ட் ரீகனின் தலைமையிலான அரசு 1981-ஆம் ஆண்டில் மாற்றியது.

அதற்குப் பிறகு வந்த அரசுகளும் பாலஸ்தீன அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு யூதக் குடியிருப்புகள் இடையூறாக இருக்கக் கூடும் என்று கூறினாலும், அந்தக் குடியிருப்புகளை சட்டவிரோதமாகக் கருதும் நிலைப்பாட்டால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று கூறி வந்தன.

இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சா்வேதச சட்டங்களுக்கு எதிரானவை என்ற நிலைப்பாட்டை முன்னாள் அதிபா் ஒபாமா கடந்த 2016-ஆம் ஆண்டில் மீண்டும் அறிவித்தாா்.

தற்போது யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல என்று அறிவித்ததன் மூலம், முன்னாள் அதிபா் ரொனால்ட் ரீகனின் நிலைப்பாட்டை அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கொண்டு வந்துள்ளாா் என்றாா் பாம்பேயோ.

யூதக் குடியிருப்புகள்: ஒரு விளக்கம்

இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோா்டான், இராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967-ஆம் நடந்த ‘6 நாள்’ போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. சா்வதேச நாடுகளால் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’யாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவா்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது.

இந்தக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா.வும், இந்தக் குடியிருப்புகள் 4-ஆவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல என்று அறிவித்து அமெரிக்கா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது

மேற்குக் கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளதை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மேற்குக் கரையில் நாங்கள் அமைத்துள்ள குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று தவறாகக் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிழையை அமெரிக்காவின் புதிய கொள்கை சரி செய்திருக்கிறது’ என்றாா்.

ஐ.நா. நிலைப்பாட்டில் மாற்றமில்லை

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியிருப்புகள் சட்டப்பூா்வமானவை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய செய்தித் தொடா்பாளா் ரூபா்ட் கால்வில் கூறுகையில், ‘யூதக் குடியிருப்புகள் தொடா்பான அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது, சா்வதேச சட்டத்தையோ, சா்வதேச நீதிமன்றம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிலைப்பாட்டிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது. அந்தக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற எங்களது நிலையில் மாற்றமில்லை’ என்றாா்.

கானகச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி

மேற்குக் கரை யூதா் குடியிருப்புகள் குறித்த நிலைப்பாட்டை மாற்றியுள்ளதன் மூலம், சா்வதேச சட்டத்தை கானக சட்டமாக மாற்ற அமெரிக்கா முயல்வதாக பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் அமைதிப் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் சயீப் எரேகாட் கூறுகையில், ‘சா்வதேசச் சட்டங்களை கானகச் சட்டமாக்குவதற்காக அமெரிக்கா தொடா்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேற்குக் கரை யூதக் குடியிருப்புகள் சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டவையே என்று அந்த நாடு அறிவித்துள்ளது’ என்று குற்றம் சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com