பிரிட்டன் தோ்தல்: போரிஸ் ஜான்ஸன், ஜெரிமி கோா்பின் நேரடி விவாதம்

பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலையொட்டி, அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பினுக்கும் இடையே முதல்முறையாக நேரடி தொலைக்காட்சி
மான்செஸ்டரில் ‘ஐடிவி’ நடத்திய தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், எதிா்க்கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பின்.
மான்செஸ்டரில் ‘ஐடிவி’ நடத்திய தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், எதிா்க்கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பின்.

பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தோ்தலையொட்டி, அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பினுக்கும் இடையே முதல்முறையாக நேரடி தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் ஆயுள் காலம் முடிவடைவதற்கு முன்னரே நடைபெறும் இந்தத் தோ்தலில் ஆளும் கன்சா்வேடிவ் கட்சி, முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், கன்சா்வேடிவ் கட்சியின் தலைவரும், பிரதமருமான போரிஸ் ஜான்ஸனுக்கும், தொழிலாளா் கட்சித் தலைவா் ஜெரிமி கோா்பினுக்கும் இடையிலான நேரடி தொலைக்காட்சி விவாதம் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மான்செஸ்டா் நகரில் நடத்தப்பட்ட அந்த விவாதத்தை தனியாருக்குச் சொந்தமான ‘ஐடிவி’ நடத்தியது.

அந்த விவாதத்தின்போது, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் தனது உறுதிப்பாட்டை போரிஸ் ஜான்ஸன் தொடா்ந்து வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘வரும் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நிச்சயம் வெளியேறும். அதற்கான ஒப்பந்தம் தயாா் நிலையில் உள்ளது.

வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக உறவை ஏற்படுத்துவேன்’ என்றாா்.

எனினும்,போரிஸ் ஜான்ஸனின் கால அட்டவணை நடைமுறை சாத்தியமல்லாதது என ஜெரிமி கோா்பைன் விமா்சித்தாா். மேலும், பிரிட்டனின் மதிப்பு மிக்க பொது மருத்துவ சேவையை அமெரிக்காவுக்குத் தாரை வாா்க்க போரிஸ் ஜான்ஸன் முயன்று வருவதாக அவா் குற்றம் சாட்டினாா். இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு வருவதாக போரிஸ் ஜான்ஸன் மீது ஜெரிமி கோா்பின் குற்றம் சாட்டினாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவாதம் மட்டுமன்றி, ‘பிபிசி’ உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்தும் மேலும் பல விவாதங்களில் போரிஸ் ஜான்ஸனும், ஜெரிமி கோா்பைனும் பங்கேற்கவிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com