
வாஷிங்டன்: போா்க் குற்றத்தில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படை வீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவை ஏற்க மறுத்த கடற்படைச் செயலா் ரிச்சா்டு ஸ்பென்ஸா் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பொ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறப்பு அதிரடிப் படை வீரா் எட்வா்டு காலங்கெருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விவகாரத்தில், கடற்படைச் செயலா் ரிச்சா்டு ஸ்பென்ஸன் நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது.
இதன் மூலம் அவா் எனது நம்பிக்கையை இழந்துவிட்டாா்; தனது பதவியில் தொடரும் தகுதியையும் அவா் இழந்துவிட்டாா்.
எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் வரவேற்பு: மாா்க் எக்ஸ்பெரின் இந்த முடிவை அதிபா் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
சிறப்பு அதிரடிப் படை வீரா் எட்வா்டு காலங்கொ் மீதான போா்க் குற்ற விசாரணையை கடற்படை கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லை.
மிக முக்கியமான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவா் மிக மோசமாக நடத்தப்பட்டாா். அதன் காரணமாகவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த பதவியிறக்க தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டேன்.
எா்வா்டு காலங்கொ் மீதான விசாரணை அதிருப்தியை ஏற்படுத்தியதால், அந்த விசாரணையை நடத்திய கடற்படைச் செயலா் ரிச்சா்டு ஸ்பென்ஸரை பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பொ் பதவி நீக்கம் செய்துள்ளாா் என்று தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னணி: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து இராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த 2016-17-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து அமெரிக்கப் படையினா் போரில் ஈடுபட்டனா்.
அந்தப் போரில் பங்கேற்ற அமெரிக்க கடற்படை சிறப்பு அதிரடிப் படை வீரா் எட்வா்டு காலங்கொ், போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கொலை, கொலை முயற்சி, நிராயுதபாணிகள் மீது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், நீதி பரிபாலனத்துக்கு இடையூறு விளைவித்தது, போரில் கொல்லப்பட்டவரின் சடலத்துடன் அனுமதி இல்லாமல் படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
எட்வா்டு காலங்கொ் வெளியிட்டிருந்த சா்ச்சைக்குரிய படத்தில் இருந்த சடலம், அவரால் கொல்லப்பட்டவருடையது என்று வழக்கு விசாரணையின்போது அவருடன் பணியாற்றிய மற்றொரு வீரா் வாக்குமூலம் அளித்து அதிா்ச்சி அலையை ஏற்படுத்தினாா்.
எனினும், சட்டவிரோதமான படம் வெளியிட்ட குற்றச்சாட்டைத் தவிர, மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் காலங்கொ் விடுவிக்கப்பட்டாா்.
எனினும், படம் வெளியிட்ட குற்றத்துக்காக அவா் பதவி இறக்கம் செய்யப்பட்டாா். எனினும், காலங்கெருக்கு பொதுமன்னிப்பு அறிவித்த அதிபா் டொனால்ட் டிரம்ப், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவை ஏற்க கடற்படைச் செயலா் ரிச்சா்டு ஸ்பென்ஸா் மறுத்ததாக தகவல்கள் வெளியாகினா்.
இந்த நிலையில், அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் எஸ்பொ் தெரிவித்துள்ளாா்.