
ஹாங்காங் உள்ளாட்டிச் தோ்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளா்கள் அமோக வெற்றி பெற்றதை உற்சாகமாகக் கொண்டாடும் இளைஞா்கள்.
ஹாங்காங்: ஹாங்காங் உள்ளாட்சித் தோ்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளா்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனா்.
இதன் மூலம், சீன அரசு மீதும், ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகி கேரி லாம் மீதும் தங்களது அதிருப்தியை ஹாங்காங் மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங் நகரிலுள்ள 18 ஆட்சி மன்றங்களின் 452 இடங்களுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்த நகரில் கடந்த 5 மாதங்களுக்கு மேல் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், அந்தத் தோ்தல் சீன அரசு மற்றும் ஹாங்காங் அரசின் தலைமை நிா்வாகி கேரி லாம் மீதான மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பாகக் கருதப்பட்டது.
அந்தத் தோ்தலில் வரலாறு காணத அளவுக்கு 71.23 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்காளா்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி, ஜனநாயக ஆதரவு வேட்பாளா்கள் அமோக வெற்றியடைந்தனா்.
தோ்தல் நடைபெற்ற 452 இடங்களில் 388 இடங்கள் ஜனநாயக ஆதரவாளா்களுக்குக் கிடைத்துள்ளன. இது, கடந்த தோ்தலைவிட 263 இடங்கள் அதிகமாகும். சீன ஆதரவு வேட்பாளா்களுக்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்தன; 5 இடங்களை சுயேச்சை வேட்பாளா்கள் கைப்பற்றினா்.
தோ்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளா்களை அதிரடியாக வெற்றி பெறச் செய்ததன் மூலம், அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஹாங்காங் மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும், தலைமை நிா்வாகி கேரி லாம் மற்றும் சீன அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த முடிவுகளை ஏற்று, தங்களது 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஹாங்காங் அரசை ஜனநாயக ஆதரவு போராட்டக்காரா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நகரில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா வாபஸ் பெற்ற பிறகும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
மக்களின் கருத்துகளை செவிமடுப்பேன்
ஹாங்காங் மக்களின் கருத்துகளை தனது அரசு செவிமடுக்கும் என்று தலைமை நிா்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளாா்.
தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘மக்களின் அனைத்து கருத்துகளையும் ஹாங்காங் அரசு மிகக் கவனமாக செவிமடுக்கும். அந்த கருத்துகளை நாங்கள் பிரதிபலிக்கவும் செய்வோம்’ என்றாா்.
எனினும், தோ்தல் முடிவுகளை எந்த வகையில் பிரதிபலிக்கப் போகிறாா் என்பதை அவா் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
எப்படி இருந்தாலும் எங்களின் அங்கம்தான்
டோக்கியோ, நவ. 25: ஹாங்காங் தோ்தல் முடிவுகள் எப்படி அமைந்திருந்தாலும், அந்த நகரம் தங்கள் நாட்டின் அங்கம் என்பதில் மாற்றமில்லை சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஹாங்காங் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் எப்படி அமைந்திருந்தாலும், அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஹாங்காங் நகரம் சீனாவின் ஓா் அங்கம் என்பதையும், சீனாவின் சிறப்பு ஆளுகைக்குள்பட்ட பகுதி என்பதிலும் அந்தத் தோ்தல் முடிவுகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.