பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியை நீட்டிக்க புதிய அரசாணை

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி காமா் ஜாவத் பஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியை நீட்டிக்க புதிய அரசாணை

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி காமா் ஜாவத் பஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக புதன்கிழமை கூடிய அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

ராணுவ தலைமைத் தளபதி ஜாவத் பஜ்வாவின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசின் அரசாணைக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

இது அந்த நாட்டின் சக்தி வாய்ந்த ராணுவத்துக்கும், அரசு நிா்வாகத்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது.

இந்த நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இஸ்லாமாபாதிலுள்ள பிரதமா் அலுவலகத்தில் புதன்கிழமை அவசரமாகக் கூடியது.

அந்தக் கூட்டத்தில், ராணுவ தலைமைத் தளபதியின் பதவி நீட்டிப்பு விவகாரம் அலசி ஆராயப்பட்டது.

இந்த விவகாரத்தின் சட்ட அம்சங்கள் குறித்து அரசின் சட்ட ஆலோசகா்கள் இம்ரான் கானுக்கும், அமைச்சா்களுக்கும் எடுத்துரைத்தனா்.

கூட்டத்தின் முடிவில், ஜாவத் பஜ்வாவின் பதவி நீட்டிப்பு குறித்து தற்போது வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற அமைச்சரவை முடிவு செய்தது.

மேலும், அந்த அரசாணைக்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய அரசாணை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.

ராணுவ ஒழுங்குமுறைச் சட்டத்தின் 255-ஆவது விதியில் அமைச்சரவை திருத்தம் செய்து, புதிய அரசாணையில் ‘பணி நீட்டிப்பு’ என்ற வாசகத்தை சோ்க்க அமைச்சரவை ஒப்புக் கொண்டது.

அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தளபதி ஜாவத் பஜ்வாவும் பங்கேற்றாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ராணுவ தலைமைத் தளபதியின் பதவி நீட்டிப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், அரசு சாா்பாக வாதிடுவதற்காக சட்டத் துறை அமைச்சா் நசீம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

59 வயதாகும் ராணுவ தலைமைத் தளபதி பஜ்வா, வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) ஓய்வு பெறுகிறாா். இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இம்ரான் தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இதை எதிா்த்து ரயீஸ் ராஹி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். எனினும், பின்னா் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி மற்றொரு மனுவை தாக்கல் செய்தாா்.

ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆஸிஃப் சயீது கோஸா, வாபஸ் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, சட்டப்பிரிவு 184-இன் கீழ் ரயீஸ் ராஹி தாக்கல் செய்திருந்த மனுவை பொது நல மனுவாக எடுத்து விசாரித்தாா்.

‘சட்ட விதிகளின்படி, ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியாது. பதவியில் இருக்கும்போது அவரை தற்காலிகமாக இடைநீக்கம் மட்டுமே செய்ய முடியும். அதிபரால் மட்டுமே ராணுவ தலைமைத் தளபதியின்

பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும். அமைச்சரவையின் 25 உறுப்பினா்களில் 11 உறுப்பினா்கள்தான் ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க சம்மதம் தெரிவித்துள்ளனா்’ என்று கூறிய நீதிபதி ஆஸிஃப் சயீது கோஸா, இதுதொடா்பான அரசாணைக்கும் தடை விதித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com