சவுதி: பொதுவெளியில் முத்தமிடுதல் மற்றும் இறுக்கமான ஆடை அணிதலுக்கு கடுமையான அபராதம் விதிக்க முடிவு!

‘பெண்கள் தோள்பட்டை மற்றும் முழங்கால்களை பொது இடத்தில் மறைக்க வேண்டும்," என்று அந்த இணையதள அறிக்கை கூறுகிறது.
சவுதி: பொதுவெளியில் முத்தமிடுதல் மற்றும் இறுக்கமான ஆடை அணிதலுக்கு கடுமையான அபராதம் விதிக்க முடிவு!

ரியாத்: தனது எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கியுள்ளது சவுதி அரேபியா.

சவூதி அரசு, சனிக்கிழமையன்று "பொது ஒழுக்கத்தை" மீறும் குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப் போவதாகக் கூறியது, இதில் இறுக்கமான ஆடைகளை அணிதல் மற்றும் பொதுவெளியில் அப்பட்டமாக ஆண்களும், பெண்களும் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆகியவை அடங்கும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக சவுதியின் கதவுகள் திறந்து வைக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, "பொது ஒழுக்கத்தை" மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, இது போன்ற 19 "குற்றங்களை" அடையாளம் கண்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் கூறியது, ஆனால் அந்தக் குற்றங்கள் எவை? அவற்றுக்கான அபராதங்கள் என்ன? போன்ற விவரங்களை குறிப்பிடவில்லை, ஏனெனில் தீவிர பழமைவாத இஸ்லாமிய நாடு அதன் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்களை முதன்முறையாக வழங்கத் தொடங்கியுள்ளதே தவிர அதைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களில் சிலர் தங்களது பாரம்பர்ய கட்டுப்பாடுகளை மீறி விடக்கூடாது எனும் அச்சமே இந்த நேரத்தில் இப்படியொரு அறிக்கை வெளியிடக் காரணமானது.

‘புதிய விதிமுறைகளின் படி ஆண்களும் பெண்களும் அடக்கமாக உடை அணிய வேண்டும் மற்றும் பொது வெளியில் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாக அடக்கமான ஆடைகளைத் தேர்வு செய்து அணிய வேண்டும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
நாட்டுக்குள் வரவிருக்கும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் பொது நடத்தை தொடர்பான சட்டங்களை அறிந்திருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த விதிமுறைகள் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் சவுதிக்கு சுற்றுலா வரும் அந்நிய நாட்டவருக்கும் பொருந்தும். சட்டத்தை அறிவதன் மூலம் அவர்களும் இதற்கு கட்டுப்பட்டவர்கள், இணங்குபவர்கள் என்றே அர்த்தம் கொள்ளப்படும்’ என்று சவுதி அரசு கருதுகிறது.
இப்போது வரை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இப்போது ஆன்லைன் இ-விசாக்கள் அல்லது வருகைக்கான விசாக்களுக்கு தகுதியுடையவர்கள் என்று சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

‘கிக்ஸ்டார்ட்டிங் சுற்றுலா’ என்பது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் அடிப்படை மையங்களில் ஒன்றாகும், இது எண்ணெய்க்கு பிந்தைய அரபு பொருளாதார சகாப்தத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தரக்கூடும் என இளவரசர் நம்புகிறார்.

ஆனால், ஆண்டாண்டு காலமாக ஆல்கஹால் தடை மட்டும் பாலியல் பேதத்தை தங்களது அடிநாதமாகக் கொண்டு இயங்கும் ஒரு பழமைவாத நாடான சவுதி அரேபியாவிற்கு ஆண்டுதோறும் முஸ்லீம் புனித தலங்களான மெக்கா, மதினாவைத் தேடித்தான் யாத்ரீகர்கள் செல்ல விரும்பக் கூடுமே தவிர சுற்றுலாத் தலம் என்றாலே கொண்டாட்டத்திற்கு முதலிடம் அளிக்கும் மனநிலையில் உள்ள உலகளாவிய சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு விரும்பத் தகுந்த சுற்றுலாத் தலமாக திகழும் வாய்ப்பு குறைவென்றே கருதப்படுகிறது.

இங்கு வருகை தரும் ஆண்களும் பெண்களும் ‘இறுக்கமான ஆடை’ அல்லது ‘ஆபாசமான மொழி அல்லது படங்கள்’ கொண்ட ஆடைகளைத் தவிர்க்க வேண்டும், மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள், சவுதி சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் படித்தறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

‘பெண்கள் தோள்பட்டை மற்றும் முழங்கால்களை பொது இடத்தில் மறைக்க வேண்டும்," என்று அந்த இணையதள அறிக்கை கூறுகிறது.

ஆனால் சுற்றுலாத்துறைத் தலைவர் அகமது அல் ஹதீப் கூறுகையில், சவுதி பெண்களுக்கு இன்றும் கட்டாய விதியாக உள்ள அபயா அங்கியை இங்கு வருகை தரும் அயல்நாட்டுப் பெண்கள் அணிய வேண்டியதில்லை. அப்படியான கட்டுப்பாடுகள் அயல்நாட்டுப் பெண்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.

இப்படியாக பட்டத்து இளவரசர் முகமது தனது நாட்டின் மீதான அதி-பழமைவாத பிம்பத்தை அசைக்க முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் முதற்கட்டமாக.. சினிமா மற்றும் பெண்களை ஓட்டுநர்களாக நியமிப்பதில் உள்ள தடைகளை அகற்றினார். மேலும், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்கும் விதமான இசை நிகழ்ச்சிகளையும் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் கூட அவற்றின் மீதான தடைகளை நீக்கி ஊக்குவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

அரசின் இத்தகைய தளர்வான சமூக விதிமுறைகளை சவுதி மக்களில் பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர்.. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதிற்குட்பட்டவர்கள்.

ஆனால், ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவையால் முதலில் அங்கீகரிக்கப்பட்ட புதிய பொது ஒழுக்க வழிகாட்டுதல்கள் தெளிவற்றவை என்று மக்களிடையே பரவலான கருத்திருக்கிறது, அரசின் இந்த புதிய விதிமுறைகளைப் பற்றி திறந்தவெளி விவாதம் தேவை என சவுதி மக்கள் கவலையுடன் கருதி வருகின்றனர். கவலைக்குக் காரணம், சவுதியின் இயங்கும் கலாசார காவலர்களின் திடீர் மறுமலர்ச்சியை அரசு இந்தப் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் தூண்டி விட்டு விடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நீடிக்கிறது.

ஏனெனில், சவுதி அரேபியாவின் மத காவல்துறை ஒரு சமயம் மால்களின் திரண்டிருந்த ஆண்களையும், பெண்களையும் அடித்து வெளியேற்றி பிரார்த்தனை செய்யத் துரத்தியதும், ஆண்களும், பெண்களும் பொது இடத்தில் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தால் உடனே அவர்களை அடித்துத் துரத்துவதையும், துன்புறுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால் தான், ஆடை விஷயத்தில் சவுதி அரசின் புதிய தடை நீக்க அறிவுப்புகளையும் கூட அம்மக்கள் சந்தேகக் கண்களுடனே காண வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com