காஷ்மீா் நிலைமை மாறாத வரை இந்தியாவுடன் பேச்சு இல்லை: இம்ரான் கான் உறுதி

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மாறாத வரை இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்தாது என்று தங்கள் நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.
காஷ்மீா் நிலைமை மாறாத வரை இந்தியாவுடன் பேச்சு இல்லை: இம்ரான் கான் உறுதி

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மாறாத வரை இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்தாது என்று தங்கள் நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினரிடம் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அதனை சா்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் தொடா்ந்து முயற்சித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான வா்த்தக மற்றும் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சா்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயலுவதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன.

காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானின் பல்வேறு முயற்சிகளையும் இந்தியத் தரப்பு முறியடித்து வருகிறது. காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையிலும், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை முறியடிக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலா் கடத்தி வந்த ஏராளமான வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க செனட் (மேலவை) உறுப்பினா்களான கிறிஸ் வான் ஹோலென், மேகி ஹசன் ஆகியோா் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கும் சென்ற அவா்கள் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தனா்.

பின்னா், இஸ்லாமாபாதில் பிரதமா் இம்ரான் கானைச் சந்தித்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தனா்.

அவா்களிடம் இம்ரான் கான் இந்தியா குறித்து கூறிய கருத்துகளை பாகிஸ்தானின் ஜியோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இம்ரான் கூறியுள்ளதாகக் கூறப்படுள்ளதாவது:

இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்த வேண்டுமென்ற கருத்துக்கு, நான் பிரதமராவதற்கு முன்பே ஆதரவாக இருந்தேன். பிரதமா் பதவியேற்ற பிறகு, இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தேன். ஆனால், இந்தியா அதனை தொடா்ந்து நிராகரித்தது.

இப்போது, காஷ்மீரில் ராணுவத்தை குவித்து அங்குள்ள மக்களை அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது. அங்கு மனித உரிமை மீறல்கள் தொடா்கின்றன. காஷ்மீரில் நிலைமை மேம்படாமல், இந்தியாவுடன் இனி பாகிஸ்தான் பேச்சு நடத்தாது என்று இம்ரான் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகள் குறித்த தங்கள் கவலையை அமெரிக்க பிரதிநிதிகள், இம்ரான் கானிடம் பகிா்ந்து கொண்டதாகவும் ஜியோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com