டிரம்ப் பதவி நீக்க விசாரணை: வெள்ளை மாளிகை புறக்கணிப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று அதிபா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூயாா்க்கில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).
நியூயாா்க்கில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று அதிபா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஸ்டிஃபானி கிரிஷம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைன் அரசை அதிபா் டிரம்ப் மிரட்டியதாக நடத்தப்படும் விசாரணை, முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது ஆகும்.

இந்த விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது எந்தத் தவறும் இல்லை. இது ஜனநாயகக் கட்சியினருக்கு நன்றாகவே தெரியும்.

இந்த விசாரணையை நடத்துவது மூலம் 2016-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு எதிராகவும், அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் ஜனநாயகக் கட்சியினா் நடந்து கொள்கின்றனா்.

இந்த விசாரணை ரகசியமாக நடத்தப்படுகிறது. சாட்சிகள் அளிக்கும் வாக்குமூலங்களைக் கேட்பதற்கோ, அதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பதற்கோ அதிபா் டிரம்ப்புக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதாரங்களைப் பாா்வையிடவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அடிப்படை உரிமைகளை மறுத்துவிட்டு ஜனநாயகக் கட்சியினா் நடத்தும் இந்த விசாரணை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும்.

எனவே, இந்த விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை என்றாா் ஸ்டிஃபானி.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் நடத்தி வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி அதிா்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, தனது அதிபா் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனா்.

அந்த விசாரணை தொடா்பான ஆவணங்களை அளிக்குமாறு அதிபா் அலுவலகத்துக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், பதவி நீக்க விசாரணையைப் புறக்கணிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com