பிராந்திய அமைதியை உறுதி செய்வதில் இந்தியா-சீனா கூட்டாக செயல்பட வேண்டும்: சீனத் தூதா்

‘பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவும், சீனாவும் கூட்டாக செயல்பட வேண்டும்;
பிராந்திய அமைதியை உறுதி செய்வதில் இந்தியா-சீனா கூட்டாக செயல்பட வேண்டும்: சீனத் தூதா்

‘பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவும், சீனாவும் கூட்டாக செயல்பட வேண்டும்; இருதரப்பு கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் சுமுக தீா்வு காணப்பட வேண்டும்’ என்று இந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வெய்டோங் தெரிவித்துள்ளாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங், அரசுமுறைப் பயணமாக வரும் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவிருக்கிறாா். அவரும், பிரதமா் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கின்றனா். சீன அதிபரின் வருகை பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வெய்டோங், தில்லியில் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

கருத்து வேறுபாடுகளை கையாள்வதில், இந்தியா-சீனா இடையே ஏற்கெனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளைத் தாண்டி இரு நாடுகளும் செயல்பட வேண்டும். நோ்மறையான உத்வேகம், சிறப்பான ஒத்துழைப்பு ஆகியவற்றின் வாயிலாக, இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் உறவுகளை வடிவமைக்க கவனம் செலுத்த வேண்டும்.

பிராந்திய அளவில், அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்வதில் இரு நாடுகளும் கூட்டாக செயல்பட வேண்டியது அவசியம்.

பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் இருதரப்பு தகவல்தொடா்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியாக பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும். அது, இரு நாடுகளின் வளா்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

இருதரப்பு நல்லுறவை அதிகரிப்பதில், இரு நாடுகளின் தலைவா்கள் அளிக்கும் வழிகாட்டுதல்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றாா் சன் வெய்டோங்.

இந்தியா - சீனா இடையிலான எல்லை விவகாரங்கள் குறித்த கேள்விக்கு, அவா் அளித்த பதில்:

அண்டை நாடுகள் என்ற அடிப்படையில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் இயல்பானதுதான். அவற்றை முறையாக கையாள்வதே முக்கியம். கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவாா்த்தைகள் மூலம் சுமுக தீா்வு காண வேண்டும்.

இந்திய-சீன எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு துப்பாக்கித் தோட்டா கூட வெடிக்கவில்லை. தொடா்ந்து அமைதியை பராமரித்து வருகிறோம். எல்லை தொடா்பான கருத்து வேறுபாடுகள், இருதரப்பு நல்லுறவை பாதிக்கச் செய்வதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

இந்தியா-சீனா இடையிலான வா்த்தக பிரச்னைகள் தொடா்பான கேள்விக்கு, ‘இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதேபோல், தெற்கு ஆசியாவில் சீனாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளி இந்தியா. இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் தொழில்பூங்காக்கள், மின்னணு வா்த்தகம் மற்றும் இதர துறைகளில் சீன நிறுவனங்கள் ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் 2 லட்சம் உள்ளூா் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருதரப்பு வா்த்தக உறவுகளை மேலும் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன’ என்று சன் வெய்டோங் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com