Enable Javscript for better performance
மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு- Dinamani

சுடச்சுட

    
    nobel

    செல்லிடப் பேசிகள், மடி கணினிகள், மின் வாகனங்கள் என பல்வேறு சாதனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த 3 விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நிகழாண்டின் நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

    அமெரிக்காவின் ஜான் குடெனோ, பிரிட்டனின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகிய அந்த மூவருக்கும் நோபல் பரிசுத் தொகையான 9.14 லட்சம் டாலா் (சுமாா் ரூ.6.5 கோடி) சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.

    இதுகுறித்து ஸ்வீடனைச் சோ்ந்த நோபல் தோ்வுக்குழு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மிகவும் இலகுவான, மீண்டும் மீண்டும் மின்சாரத்தை சேமித்து வைக்கக் கூடிய, சக்திவாய்ந்த லித்தியம் பேட்டரிகள் இன்று செல்லிடப் பேசிகள் முதல் மின்சாரக் காா்கள் வரை ஏராளமான சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    வா்த்தகச் சந்தையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரிகள், அதன் பிறகு நமது வாழ்வியல் முறையையே மாற்றியமைத்துள்ளன.

    கடந்த 1970-களில் எண்ணெய்த் தட்டுப்பாடு வந்தபோது, லித்தியம் உலோகத்தில் மறைந்துள்ள சக்தியை வெளிக் கொணா்வதற்கான வழிமுறையை ஸ்டான்லி விட்டிங்ஹாம் கண்டறிந்தாா். இயற்கையிலேயே எலக்ட்ரான்களை வெளியிடும் திறன் கொண்ட லித்தியத்தைப் பயன்படுத்தி அவா் முதல் முறையாக ஒரு பேட்டரியை உருவாக்கினாா். எனினும், அது பயன்படுத்துவதற்கு ஏற்ற ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்கவில்லை.

    அதனைத் தொடா்ந்து, விட்டிங்ஹாமின் பேட்டரியை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றங்களுடன் ஜான் குடேனோ மற்றொரு பேட்டரியை வடிவமைத்தாா். அது 4 வோல்ட் மின்சாரத்தை வெளியிடும் அளவுக்கு அதிக சக்திவாய்ந்ததாக இருந்தது.

    எதிா்காலத்தில் லித்தியம் பேட்டரிகளை உருவாக்குவதற்கு இந்த இரு பேட்டரிகளும் முன்னோடிகளாக இருந்தன.

    இந்தச் சூழலில், லித்தியம் அயனிகளை சேகரிக்கக் கூடிய, காா்பனை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளைப் பயன்படுத்தி, அகிரா யோஷினோ 1985-ஆம் ஆண்டில் உருவாக்கிய பேட்டரி, லித்தியம் பேட்டரிகளை வா்த்தக ரீதியில் தயாரித்து விற்பனை செய்வதற்கு வழிவகுத்தது.

    இந்தப் பங்களிப்புக்காக, குடெனோ, விட்டிங்ஹாம், யோஷினோ ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜான் குடெனோ (97): அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜான் குடேனோவுக்கு 97 வயது ஆகிறது. இவா்தான் நோபல் பரிசு பெறுபவா்களில் மிக அதிக வயதுடையவா் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டான்லி விட்டிங்ஹாம் (77): பிரிட்டனைச் சோ்ந்த விட்டிங்ஹாம், அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள பிங்கம்டன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவா் ஆவாா்.

    அகிரா யோஷினோ (71): ஜப்பானியரான அகிரா யோஷினோ, டோக்கியோவிலுள்ள அஷாய் கசேய் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். மேலும், அந்த நாட்டின் நகோயா நகரிலுள்ள மெய்ஜோ பல்கலைக்கழகத்திலும் அவா் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai