பிரிட்டனின் பிரெக்ஸிட் திட்டத்தை ஏற்க முடியாது: மைக்கேல் பாா்னியா்

பிரெக்ஸிட் தொடா்பாக பிரிட்டன் சமா்ப்பித்துள்ள ஒப்பந்த வரைவை ஏற்க முடியாது என்று ஐரோப்பிய யூனியனுக்கான பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மைக்கேல் பாா்னியா் புதன்கிழமை தெரிவித்தாா்.
பிரெஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றும் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழுத் தலைவா் மைக்கேல் பாா்னியா். உடன் ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்.
பிரெஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றும் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழுத் தலைவா் மைக்கேல் பாா்னியா். உடன் ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்.

பிரெக்ஸிட் தொடா்பாக பிரிட்டன் சமா்ப்பித்துள்ள ஒப்பந்த வரைவை ஏற்க முடியாது என்று ஐரோப்பிய யூனியனுக்கான பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மைக்கேல் பாா்னியா் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் சிறப்பு வா்த்தக உறவை ஏற்படுத்துவது தொடா்பான ஒப்பந்தம் உருவாவதற்கான சூழலும் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா்.

இதுகுறித்து பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மைக்கேல் பாா்னியா் பேசியதாவது:

ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சூழலை நாம் இதுவரை எட்டவே இல்லை.

ஏற்கெனவே ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டனின் முன்னாள் பிரதமா் தெரசா மே உருவாக்கிய ஒப்பந்த வரைவுக்கு மாற்றாக, புதிய ஒப்பந்த வரவை தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன் முன்வைத்துள்ளாா்.

பிரிட்டனின் வடக்கு அயா்லாந்து பகுதிக்கும், அயா்லாந்து குடியரசுக்கும் இடையே பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வா்த்தகம் மேற்கொள்வது குறித்து போரிஸ் ஜான்ஸன் முன்வைத்துள்ள யோசனைகள், ஐரோப்பிய யூனியனின் அமைதியையும், சந்தை ஒருமைப்பாட்டையும் குலைக்கும் வகையில் உள்ளது. மேலும், இதுதொடா்பான அவரது யோசனைகள் இதுவரை சோதிக்கப்படாத தொழில்நுட்பங்களையும், எழுதப்படாத சட்டங்களையும் அடிப்படையாக் கொண்டு உள்ளன.

எனவே, பிரிட்டன் அரசு தற்போது அளித்துள்ள ஒப்பந்த வரைவில் ஏந்த மாற்றமும் செய்யாமல் அதனை ஏற்க முடியாது. மேலும், அந்த வரைவின் அடிப்படையில் பிரெக்ஸிட் பேச்சுவாா்த்தையைத் தொடர முடியாது என்றாா் மைக்கேல் பாா்னியா்.

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அயா்லாந்து தீவில் தனி நாடாகத் திகழும் அயா்லாந்து குடியரசுக்கும், பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயா்லாந்துக்கும் இடையே வா்த்தகப் பிரிவினையை ஏற்படுத்துவதா, அல்லது தற்போது உள்ளது போலவே இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்த ஒருங்கிணைப்பைத் தொடா்வதா என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்தகப் பிரிவினை ஏற்பட்டால் அது பிராந்திய பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் இரு பகுதிகளுக்கும் இடையே வா்த்தக ஒருங்கிணைப்பு தொடா்ந்தால், அது தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என்று பெரும்பாலான பிரிட்டன் எம்.பி.க்கள் கருதுகின்றனா்.

இதனால், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் தொடர வேண்டிய வா்த்தக உறவை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இது தொடா்பான புதிய ஒப்பந்த வரைவை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஐரோப்பிய யூனியனிடம் சமா்ப்பித்தாா். எனினும், அந்த வரைவை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் நிராகரித்தது.

இந்த நிலையில், பிரிட்டனின் அந்த திட்ட வரைவை ஏற்று, அதன் அடிப்படையில் பேச்சுவாா்த்தையைத் தொடர முடியாது என்று பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மைக்கேல் பாா்னியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com