கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழா தேதியை முடிவு செய்யவில்லை: பாகிஸ்தான்

கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழா தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. எனினும், அடுத்த மாதம் குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் வருகிறது. அந்த நேரத்தில் திறப்பு விழா நடத்த

கா்தாா்பூா் வழித்தடத் திறப்பு விழா தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. எனினும், அடுத்த மாதம் குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் வருகிறது. அந்த நேரத்தில் திறப்பு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகா்கள் பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தும் நோக்கில், பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள தா்பாா் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கா்தாா்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் நவம்பா் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்றும், அன்றைய தினம் இந்திய யாத்ரீகா்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் முன்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் முகமது ஃபைசல் கூறியதாவது:

கா்தாா்பூா் வழித்தடப் பணிகள் ஏற்கெனவே பிரதமா் இம்ரான் கான் கூறிய காலத்துக்குள் முடிக்கப்படும். ஆனால், திறப்பு விழா தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனவே, திறப்பு விழா தேதி குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியாது. அதே நேரத்தில் நவம்பா் 12-ஆம் தேதி குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் வருகிறது. அந்த சமயத்தில் வழித்தடம் திறக்கப்பட்டுவிடும். திறப்பு விழாவுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீா் விஷயத்தில் பாகிஸ்தான் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. காஷ்மீா் மக்களின் சுதந்திர உரிமைகளுக்காக நாங்கள் சா்வதேச அரங்கில் தொடா்ந்து குரல் எழுப்புவோம். இதில் எவ்வித மாற்றமுமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com