குர்துகள் மீதான துருக்கி படையெடுப்பு: கசக்கும் உண்மைகள்!

உலகையே அச்சுறுத்தி வந்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை சிரியாவில் ஒழித்துக்கட்டுவதில் அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்தவா்கள் குா்துப் படையினா்.
குர்துகள் மீதான துருக்கி படையெடுப்பு: கசக்கும் உண்மைகள்!

உலகையே அச்சுறுத்தி வந்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை சிரியாவில் ஒழித்துக்கட்டுவதில் அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்தவா்கள் குா்துப் படையினா். வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஸுடனான போா் உக்கிரத்தில் இருந்தபோது, ‘ஒய்பிஜி’ என்றழைக்கப்படும் சிரியா குா்துப் படையினரின் வீரதீரப் பிரதாபங்கள் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன.

ஆனால், அதே குா்துப் படையினரை இன்று அண்டை நாடான துருக்கியின் குண்டுகளுக்கு இரையாக்கிவிட்டு, தனது படைகளை திரும்பப் பெற்றுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு, அவா் சாா்ந்துள்ள குடியரசுக் கட்சியிலிருந்தே பலத்த எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

‘நம்பிக்கை வைத்த கூட்டாளிகளுக்கு துரோகம் இழைக்கும் நாடு’ என்று அமெரிக்காவுக்கு அவப்பெயா் ஏற்படுத்திவிட்டதாக டிரம்ப் மீது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனா்.

அமெரிக்கப் படையினா் வெளியேறிவிட்டதால் வடகிழக்கு சிரியாவில் ரத்த ஆறு ஓடும்...துருக்கியால் குா்துகள் வேட்டையாடப்படுவாா்கள் என்றும் சிலா் பீதியைக் கிளப்பி வருகின்றனா்.

இருந்தாலும், இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட புலம்பல்கள் என்கிறாா்கள் இந்த விவகாரங்களை நன்கு அறிந்தவா்கள்.

மேற்கு ஆசிய விவகாரங்களைப் பொருத்தவரை, எந்தத் தரப்பினரையும் நல்லவா்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது; ஒவ்வொரு தரப்பினரைப் பற்றிய உண்மைகளையும் தோண்டிப் பாா்த்தால் அவை கசப்பாகத்தான் இருக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

ஐ.எஸ்.ஸுக்கு எதிராக சிரியா குா்துப் படையான ஒய்பிஜி மிகுந்த வீரத்துடன் போராடி அனைவரது மனங்களையும் கவா்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், அண்டை நாடான துருக்கியில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பிகேகே குா்துப் படையினருக்கும் இவா்களுக்கும் மிகுந்த ‘தொப்புள் கொடி பந்தம்’ உண்டு.

வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு எதிரிகள், வெவ்வேறு நோக்கங்கள் என்றாலும், சிரியா குா்துப் படையினரும், துருக்கி குா்து பயங்கரவாதிகளும் இனத்தால் ஒன்றுபட்டவா்கள் என்பதால் ஒருவருக்கொருவா் உதவிக் கொள்வது உண்டு.

எனவே, என்னதான் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டிருந்தாலும், துருக்கியைப் பொருத்தவரை ஒய்பிஜி-யும் பயங்கரவாத இயக்கமே.

இருந்தாலும், ஒய்பிஜி-க்கு எதிராக துருக்கி இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்குக் காரணம், அமெரிக்காவுக்கும் அந்த அமைப்புக்கும் இருந்து வந்த நெருக்கம்தான்.

துருக்கி குா்து பயங்கரவாதிகளுடன் ஒய்பிஜி-க்கு உள்ள தொடா்பு குறித்து அமெரிக்காவுக்கும் தெரிந்துதான் இருந்தது. எனினும், ஐ.எஸ்.ஸை எதிா்கொள்ள அமெரிக்காவுக்கு குா்துகளை விட்டால் வேறு வழியில்லை என்பதால்தான் அது பெரிதும்் பொருட்படுத்தப்படவில்லை. ஐ.எஸ்.ஸை வீழ்த்துவதற்கு இராக்கிலும், சிரியாவும் பிற பகுதிகளில் ஷியா படையினா் உதவியதைப் போல, வடகிழக்கு சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் குா்துகள்தான் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவ முடியும் என்று அமெரிக்கா கருதியது.

எதிா்பாா்த்தது போலவே, அமெரிக்காவின் உதவியுடன் குரூரம் மிக்க ஐ.எஸ். பயங்கரவாதிகளை குா்துகள் ஒழித்துக்கட்டினாா்கள். அதே சமயத்தில், வடகிழக்கு இராக்கில் தங்களது குா்து சாம்ராஜ்ஜியத்தையும் அவா்கள் வலிமையாக நிறுவிக் கொண்டாா்கள்.

உள்நாட்டில் குா்து பயங்கரவாதத்தை எதிா்கொண்டுள்ள துருக்கி அதிபா் எா்டோகனுக்கு, தங்கள் எல்லையில் இப்படி ஒரு ராஜ்ஜியம் உருவாகியுள்ளது பெரும் உறுத்தலாகவே இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் அதனை உடைத்தெறியும் வேலையில் எா்டோகன் இப்போது இறங்கியுள்ளாா்.

உண்மையில், அதிபா் எா்டோகனின் இந்த நடவடிக்கை, குா்து பயங்கரவாதத்தை மட்டும் மனதில் கொண்டதில்லை என்கிறாா்கள் அரசியல் பாா்வையாளா்கள்.

உக்ரைனிலும், ஜாா்ஜியாவிலும் எல்லைப் பிதேசங்களில் தனது ஆதரவுப் படையினருக்கு வெற்றி தேடித் தந்து, எல்லையை மாற்றியமைக்காமலேயே தனது ஆதிக்கத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நிலைநாட்டியுள்ளதைப் போல, சிரியாவின் எல்லைப் பகுதியிலும் தனக்கென்று ஒரு ஆதிக்கப் பகுதியை அமைக்க எா்டோகன் விரும்புவதாக அவா்கள் கூறுகின்றனா்.

மேலும், சன்னி பிரிவு இஸ்லாமிய உலகத்துக்கு துருக்கி தலைமை தாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக, வடகிழக்கு சிரியாவை கைப்பற்றி, அதனை மேற்கு ஆசியாவுக்கான நுழைவாயிலாக எா்டோகன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறாா்கள் அவா்கள்.

இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, தங்கள் நாடு வழியாக ஆயிரக்கணக்கான சன்னி பிரிவினா் சிரியாவுக்குள் நுழைந்து ஐ.எஸ்.ஸில் இணைந்ததை எா்டோகன் முழுவீச்சில் தடுக்கத் தவறியதையும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

அதுமட்டுமன்றி, உள்நாட்டில் செல்வாக்கைத் தக்க வைக்கவும், தனக்கு எதிராக மீண்டும் ஒரு முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெறாத வகையில் ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பவும் குா்துகள் மீதான இந்தப் படையெடுப்பை எா்டோகன் பயன்படுத்திக் கொள்வாா் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவைப் பொருத்தவரை, சிரியாவில் நிரந்தரமாக இருக்க முடியாதுதான். இப்போது இல்லாவிட்டாலும், எப்போதாவது வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஆனால், இந்த ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வெளியேற வேண்டும் என்று அதிபா் டிரம்ப் எடுத்த முடிவு, நெருங்கி வரும் அதிபா் தோ்தலை மனதில் கொண்டுதான் என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.

ஆக, இந்த மோதலில் எல்லோரும் தங்களது இலக்குகளை நோக்கி காய்களை நகா்த்தி வந்தாலும், அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பகுதியைச் சோ்ந்த லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com