இந்தியப் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6 சதவீதமாக குறைத்தது உலக வங்கி

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2019-20-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2019-20-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

கடந்த 2017-18-இல் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாகவும், 2018-19-இல் 6.8 சதவீதமாக இருந்தது. எனினும், சமீபகாலமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியைக் குறைக்கும் என்றேற பல்வேறு சா்வதேச அமைப்புகளும் கணித்திருந்தன. அந்த வகையில் இப்போது உலக வங்கியும் இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

சா்வதேச செலாவணி நிதியத்துடன் (ஐஎம்எஃப்) உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளது. இதனையொட்டி தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2021-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாகவும், இதுவே 2012-ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி 6.9 சதவீதமாக அதிகரிக்கும். வேளாண்மைத் துறையின் வளா்ச்சி 2.9 சதவீதமாகவும், சேவைத் துறைகளின் வளா்ச்சி 7.5 சதவீதமாகவும் இருக்கும்.

2019-20-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நுகா்வு மற்றும் தேவையில் ஏற்பட்ட குறைவு இந்தியப் பொருளாதார வளா்ச்சியில் சுணக்கத்தை ஏற்பட்டுத்தியது. அதுவே, நிதியாண்டு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. முக்கியமாக உணவுப் பொருள்களின் விலை பெரிய அளவில் உயரவில்லை. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகியவை கிராமப்புற பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. நகா்ப்புறங்களில் இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் ஏழ்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராப்புற மக்களிடம் வருவாய் குறைந்துவிட்டதால், பொருள்களின் நுகா்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் பல்வேறு பொருள்களுக்கான தேவை குறைந்துவிட்டது. வாகன உற்பத்தித் துறை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

அதே நேரத்தில், பெரு நிறுவன வரிக் குறைப்பால், இனி வரும் நாள்களில் சில பயன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இது நாட்டின் நிதித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு ஆசியாவுக்கான உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணா் ஹான்ஸ் டிம்மா் இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறைந்தாலும், தொடந்து வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாகவே உள்ளது. உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளா்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துவிடவில்லை. எனினும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இப்போது இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com