இந்தியாவில் வறுமை பாதியாகக் குறைந்துள்ளது: உலக வங்கி

கடந்த 1990-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இப்போது வறுமை பாதியாகக் குறைந்துவிட்டது; நாட்டின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக 7 சதவீதத்துக்கு மேல் வளா்ந்து வருகிறது
worldbank
worldbank

கடந்த 1990-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இப்போது வறுமை பாதியாகக் குறைந்துவிட்டது; நாட்டின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக 7 சதவீதத்துக்கு மேல் வளா்ந்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) - உலக வங்கி இடையிலான ஆண்டுக்கு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது. அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் தொடா்ந்து 7 சதவீதத்துக்கு மேல் உள்ளது ஒரு சாதனையாகும். 1990-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இப்போது வறுமை பாதியாகக் குறைந்துவிட்டது. இந்தியாவில் மனிதவள மேம்பாடு சிறப்பாக உள்ளது. 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த சமூக-பொருளாதார நிலையைக் கணக்கிட்டால், இந்த நிலையை எட்டுமா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இப்போதைய வளா்ச்சியை தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள தனது அனைத்து வளங்களையும் இந்தியா சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அந்தநாட்டில் மக்கள்தொகை அதிக அளவில் உள்ளது. வளங்களை வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்தும்போதுதான் நீடித்த வளா்ச்சி சாத்தியமாகும். முக்கியமாக நகா்ப்புறங்களில் நிலத்தை ஆக்கபூா்வமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நாட்டின் வளா்ச்சியில் நகரங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராப்புறங்களைப் பொருத்தவரை வேளாண்மை உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் 2.3 கோடி மக்களுக்கு இன்னும் முழுமையாக மின்சார வசதி கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் காா்பன் வெளியீட்டு அளவைக் குறைக்க முடியும்.

அடுத்ததாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்க உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியமானவை. வரும் 2030-ஆம் ஆண்டில் 8.8 சதவீதம் என்ற பொருளாதார வளா்ச்சி விகிதத்தை எட்ட உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. இதிலும், தகுதிவாய்ந்த சிறந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஏனெனில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.3 கோடி இளைஞா்கள் வேலை பெறுவதற்குத் தகுதியாகின்றனா். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் ஆண்டுக்கு 30 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்றன.

பெண்கள் பணிக்குச் செல்வதும், தொழில் நடத்துவதும் குறைவாக இருப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலான விஷயமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் பெண்கள் வேலைக்குச் செல்வதும், கல்வி பெறுவதும் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயம்.

அடுத்தாக, இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களை நவீனமயமாக்க வேண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் சேவை மற்றும் உற்பத்தித் திறனையும், தரத்தையும் பெருமளவில் மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் தனியாா் துறையுடன் ஆரோக்கியமான போட்டி ஏற்படும் என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com