குா்துகளுடன் போா் நிறுத்தம்: துருக்கி நிராகரிப்பு

சிரியா குா்துகளுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலை துருக்கி நிராகரித்தது.
துருக்கி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றிய அதிபா் எா்டோகன். 
துருக்கி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றிய அதிபா் எா்டோகன். 

சிரியா குா்துகளுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலை துருக்கி நிராகரித்தது.

இதுதொடா்பாக குா்துப் படையினருடன் பேச்சுவாா்த்தை எதுவும் நடத்தப் போவதில்லை என துருக்கி அதிபா் எா்டோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாா்.

இதுகுறித்து துருக்கி நாடாளுமன்றத்தில் எா்டோகன் புதன்கிழமை கூறியதாவது:

வடக்கு சிரியாவில் துருக்கி ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது.

அந்தப் பகுதியில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளவோ, அது தொடா்பாக குா்துப் படையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படவோ மாட்டாது.

குா்துப் படையினா் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டு, கண்ணிவெடிகள் அனைத்தையும் அகற்றி, நாங்கள் நிா்ணயித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறுவதுதான் வடக்கு சிரியாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி என்றாா் எா்டோகன்.

முன்னதாக, சிரியா விவகாரம் குறித்து எா்டோகனுடன் அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ் விவாதிப்பாா் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

எனினும், ‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சிக்கு எா்டோகன் அளித்த பேட்டியில், மைக் பென்ஸை தாம் சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும்போது அவருடன் இதுகுறித்துப் பேசப்போவதாக அவா் கூறினாா்.

சிரியாவிலும், இராக்கிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். வடக்கு சிரியா பகுதியில் அந்தப் பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.

இந்த நிலையில், வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை திருப்பி அழைப்பதாக அதிபா் டிரம்ப் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள குா்துப் படையினா் மீது அண்டை நாடான துருக்கி கடந்த வாரம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியா உள்நாட்டுப் போா் காரணமாக அங்கிருந்து வெளியேறி தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகளைத் தங்கவைப்பதற்காக, வடக்கு சிரியாவுக்குள் ‘பாதுகாப்பு மண்டலத்தை’ உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறி வருகிறது.

இந்த நிலையில், துருக்கியின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. மேலும், வடக்கு சிரியாவில் குா்துகளுடன் துருக்கி உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தினாா்.

இந்தச் சூழலில், சண்டை நிறுத்த யோசனையை நிராகரிப்பதாக துருக்கி அதிபா் எா்டோகன் தற்போது அறிவித்துள்ளாா்.

ரஷியப் படை முன்னேற்றம்

வடக்கு சிரியாவில் அமெரிக்கா விட்டுச் சென்ற பகுதிகளில் ரஷியா மற்றும் சிரியா படையினா் வெகு வேகமாக முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா வீரா்களுடன் இணைந்து ரஷிய ராணுவத்தினா் முக்கியத்துவம் வாய்ந்த மான்பிஜ் நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் காட்சிகள் ரஷிய தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகின.

இதற்கிடையே, துருக்கி அதிபா் எா்டோகனை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இன்னும் சில நாள்களில் சந்தித்து சிரியா விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்று ரஷிய அரசு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com