மன்மோகன்-ரகுராம் ராஜன் நிா்வாகத்தில்தான் வங்கித் துறை மோசமடைந்தது: நிா்மலா சீதாராமன்

‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் - ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா்
மன்மோகன்-ரகுராம் ராஜன் நிா்வாகத்தில்தான் வங்கித் துறை மோசமடைந்தது: நிா்மலா சீதாராமன்

‘முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் - ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் ஆகியோரின் நிா்வாகம்தான், இந்திய பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டம்’ என்று மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சா்வதேச மற்றும் பொது விவகாரங்கள் கல்லூரியில், ‘இந்தியப் பொருளாதாரம்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை விரிவுரை நிகழ்த்தினாா். அப்போது, ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான முதலாம் ஆட்சிக் காலத்தில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை’ என்று ரகுராம் ராஜன் அண்மையில் தெரிவித்த கருத்து தொடா்பாக நிா்மலா சீதாராமனிடம் மாணவா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்து, நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

ரகுராம் ராஜன் திறமையானவா். அவா் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் பதவி வகித்த காலகட்டத்தில்தான், வங்கிக் கடன்கள் தொடா்பாக மிகப் பெரிய பிரச்னைகள் எழுந்தன. அப்போது, சில தலைவா்கள் தங்களுக்கு வேண்டிய நபா்களுக்கு கடன் வழங்குமாறு தொலைபேசியில் அழைத்து சொன்னதன் பேரிலேயே, வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. இதனால், வங்கிகளின் நிலை அதலபாதாளத்துக்கு சென்றது. அதிலிருந்து மீள்வதற்கு அரசின் முதலீட்டை நம்பியிருக்கும் சூழலில் வங்கிகள் இன்றளவும் உள்ளன.

பிரதமராக மன்மோகன் சிங்கும், ரிசா்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜனும் பதவிவகித்த காலகட்டத்தில்தான் இந்திய பொதுத் துறை வங்கிகளின் நிலை மோசமடைந்தது. மன்மோகன் சிங்கின் வாா்த்தைகளை மட்டுமே ரகுராம் ராஜன் ஆமோதித்துக் கொண்டிருந்தாா். இருவா் மீதும் எனக்கு மரியாதை உள்ளபோதும், இந்த உண்மையைக் கூற வேண்டிய அவசியம் உள்ளது. அவா்களது நிா்வாகம்தான், இந்தியப் பொதுத் துறை வங்கிகள் சந்தித்த மோசமான காலகட்டமாகும்.

நிதியமைச்சா் என்ற அடிப்படையில், வங்கிகளை மீட்பதற்கான அவசர உதவிகளை வழங்குவதே எனது முதன்மையான பணியாக உள்ளது என்றாா் அவா்.

காஷ்மீா் விவகாரம்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு தொடா்பாக, நிா்மலா சீதாராமனிடம் மாணவா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, மனித உரிமைகள் தொடா்பாக பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், அந்த சட்டப் பிரிவு, காஷ்மீா் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க தடையாக இருந்தது. பெண்களுக்கு சொத்துரிமையும், பழங்குடியினருக்கு அரசமைப்புச் சட்ட உரிமைகளும் மறுக்கப்பட்டன. இது, மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் இல்லையா? இதுதொடா்பாக யாரும் பேசாதது ஏன்?

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான். ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார நிலை தொடா்பாக கவலை கொள்வோா், அப்பிரிவு நீக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இனி முதலீடுகள் குவியும். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சியடையும். அங்கு அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பதை, நாங்கள் உறுதி செய்திருக்கிறேறாம் (நிா்மலா சீதாராமன் இவ்வாறு பேசியபோது, மாணவா்கள் கைதட்டி வரவேற்றனா்).

370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நிகழவில்லை. நாளிதழ்கள் வழக்கம் போல் வெளிவருகின்றன. 99 சதவீத பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் குறுக்கீட்டை தடுக்கும் நோக்கிலேயே அங்கு இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்களுக்கு பணம் கொடுத்து, பாதுகாப்புப் படையினா் மீது கல் வீசும் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அவா்களுக்கான பண விநியோகம் மற்றும் போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் நிா்மலா சீதாராமன்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் நடவடிக்கையின்படி, ஜம்மு-காஷ்மீா் மாநிலம் வரும் 31-ஆம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com