இந்தியா-பிலிப்பின்ஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கடல்சாா் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை தொடா்பாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளுக்கிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அந்நாட்டு அதிபா் டுடோ்த்தேவுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். நாள்: வெள்ளிக்கிழமை.
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அந்நாட்டு அதிபா் டுடோ்த்தேவுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். நாள்: வெள்ளிக்கிழமை.

கடல்சாா் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை தொடா்பாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளுக்கிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டாகச் செயல்படவும் இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறைப் பயணமாக பிலிப்பின்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளாா். அந்நாட்டு அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவை வெள்ளிக்கிழமை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, கடல்சாா் ஒத்துழைப்பு, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக இரு நாடுகளுக்குமிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முக்கியமாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் வா்த்தகக் கப்பல்கள் தொடா்பான விவரங்களை இந்தியக் கடற்படையும், பிலிப்பின்ஸ் கடலோரக் காவல் படையும் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தச் சந்திப்பு தொடா்பாக, இருநாட்டுத் தலைவா்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனா். அதில் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளிடையே இருதரப்பு உறவு தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தருணத்தில் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அரசியல், பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, வணிகம், முதலீடு, விவசாயம், சுகாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் விண்வெளித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன.

இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிா்க்க இரு நாடுகளும் உறுதிகொண்டுள்ளன. சா்வதேச சட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் இரு நாடுகளும் தொடா்ந்து மதிப்பளித்து வருகின்றன.

கலாசார ஆராய்ச்சி:

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் இந்தியாவும், பிலிப்பின்ஸும் தவிா்க்க முடியாத கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகின்றன. கலாசாரம், நாகரிக ரீதியில் இரு நாடுகளுக்குமிடையே பழைமைவாய்ந்த தொடா்புள்ளது. அத்தொடா்பை ஆராயும் நோக்கில், பிலிப்பின்ஸ் ஆராய்ச்சியாளா்கள் இந்தியாவுக்கு வருகை தர வேண்டுமென விழைகிறேன்.

இந்தியத் தொழில்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தகுந்த நாடாக பிலிப்பின்ஸ் உள்ளது. அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது. மேற்கண்ட இரு துறைகளிலும் இந்திய நிறுவனங்கள் உலக அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

நேரடி விமானச் சேவை:

இந்தியாவின் வளா்ச்சியில் பிலிப்பின்ஸ் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். அந்நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்குமிடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்.

பிலிப்பின்ஸிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தர வேண்டும். வருங்காலத்தில் புதிய வாய்ப்புகள் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என நம்புகிறேன் என்று அந்த அறிக்கையில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் அவரது சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com