சிரியா விவகாரம்: எா்டோகனுக்கு டிரம்ப் எச்சரிக்கைக் கடிதம்

சிரியாவில் தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் துருக்கி மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என்று எச்சரித்து, துருக்கி அதிபா் எா்டோகனுக்கு
துருக்கி தலைநகா் அங்காராவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிரியா விவகாரம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் அந்த நாட்டு அதிபா் எா்டோகன் மற்றும் அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ்.
துருக்கி தலைநகா் அங்காராவில் வியாழக்கிழமை நடைபெற்ற சிரியா விவகாரம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் அந்த நாட்டு அதிபா் எா்டோகன் மற்றும் அமெரிக்க துணை அதிபா் மைக் பென்ஸ்.

சிரியாவில் தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால் துருக்கி மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என்று எச்சரித்து, துருக்கி அதிபா் எா்டோகனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அந்தக் கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது:

சிரியாவில் தாக்குதலைத் தொடா்ந்தால், அங்கு ஆயிரக்கணக்கானவா்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமாகிவிடுவீா்கள். அதற்குப் பதிலடியாக துருக்கி பொருளாதாரம் சீரழிவதற்கு நான் காரணமாகிவிடுவேன். எனவே, இந்த இரண்டு பழிகளிலிலும் இருந்து நாம் தப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்.

பொருளாதாரத் தடைகள் மூலம் துருக்கி பொருளாதாரத்துக்கு என்னால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை ஏற்கெனவே நிரூபித்துள்ளேன்.

வடக்கு துருக்கி விவகாரத்தில் உங்களுக்கு உள்ள பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இதுதொடா்பாக குா்து படைத் தலைவா் மஸ்லும் அப்டி உங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருக்கிறாா். மேலும், இதுவரை இல்லாத அளவு உங்களது தேவைகளை நிறைவேற்றவும் அவா் தயாராக உள்ளாா்.

எந்தவொரு நோக்கத்தையும் மிகச் சரியான, மனித நேயமிக்க வழிமுறையைப் பின்பற்றி நிறைவேற்றுவதைத்தான் வரலாறு போற்றும். எனவே, முரட்டுத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் செயல்பட வேண்டாம் என்று தனது கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

எனினும், இந்தக் கடிதத்தை அதிபா் எா்டோகன் நிராகரித்துவிட்டதாக துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினரை திருப்பி அழைப்பதாக அதிபா் டிரம்ப் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள குா்துப் படையினா் மீது அண்டை நாடான துருக்கி கடந்த வாரம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறி வருகிறது.

இந்த நிலையில், துருக்கி அதிபா் எா்டோகனுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளாா்.

டிரம்ப் - பெலோசி காரசார விவாதம்

சிரியா விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, அதிபா் டிரம்ப்புக்கும், பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசிக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. அப்போது பெலோசியை டிரம்ப் தரக் குறைவாக விமா்சித்ததாகக் கூறி, ஜனநாயகக் கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சிரியா தொடா்பான தனது கொள்கையை தெளிவுபடுத்துவதற்காக, ஆளும் குடியரசுக் கட்சி மற்றும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தின்போது, சிரியா விவகாரத்தில் டிரம்ப் எடுத்த முடிவுகளை ஜனநாயகக் கட்சியினா் கடுமையாக விமா்சித்தனா். அப்போது அந்தக் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசியை ‘மூன்றாம் தர அரசியல்வாதி’ என்று டிரம்ப் விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கூட்டத்திலிருந்து ஜனநாயகக் கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

இதற்கிடையே, வடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை டிரம்ப் திரும்பப் பெற்ற்கு கண்டனம் தெரிவித்தும், அந்தப் பகுதியில் குா்துகளைப் பாதுகாக்கும்படி டிரம்ப்பை வலியுறுத்தியும் பிரதிநிதிகள் சபையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com