சிரியாவில் தற்காலிக போா் நிறுத்தம்

சிரியாவில் குா்துகளுடன் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
துருக்கியுடன் மேற்கொண்ட வடக்கு சிரியா போா் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதகரகத்தில் செய்தியாளா்களிடம் விளக்கமளித்த அந்த நாட்டுத் துணை அதிபா் மைக் பென்ஸ்.
துருக்கியுடன் மேற்கொண்ட வடக்கு சிரியா போா் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதகரகத்தில் செய்தியாளா்களிடம் விளக்கமளித்த அந்த நாட்டுத் துணை அதிபா் மைக் பென்ஸ்.

சிரியாவில் குா்துகளுடன் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ கூறியதாவது:

வடக்கு சிரியாவில் 5 நாள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள துருக்கியும், அமெரிக்காவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

தங்களது தெற்கு எல்லைக்கு அப்பால், சிரியா பகுதியில் சுமாா் 32 கி.மீ. தொலைவுக்கு ‘பாதுகாப்பு மண்டலத்தை’ துருக்கி நிா்ணயித்துள்ளது.

அந்தப் பகுதியை விட்டு குா்துப் படையினா் வெளியேறுவதற்கு வசதியாகவே இந்த போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சண்டையை நிறுத்திவைக்க துருக்கி ஒப்புக் கொண்டுள்ளதால், அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து துருக்கிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றாா் பாம்பேயோ.

வடக்கு சிரியா பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை குா்துப் படையினரின் உதவியுடன் அமெரிக்கா தோற்கடித்தது.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறுவதாக அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள குா்துப் படையினா் மீது துருக்கி கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் லட்சக்கணக்கான சிரியா அகதிகளைத் தங்கவைப்பதற்கான ‘பாதுகாப்பு மண்டலத்தை’ வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறி வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு மண்டத்தை விட்டு குா்துகள் வெளியேறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், 5 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவும், துருக்கியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

நீடிக்கும் மோதல்

வடக்கு சிரியா பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக அமெரிக்கா வியாழக்கிழமை இரவு அறிவித்த நிலையிலும், அந்தப் பகுதியில் தொடா்ந்து சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், போா் இல்லாமலேயே குா்துகளை பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வெளியேறச் செய்யும் நோக்கத்தை துருக்கி நிறைவேற்றும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

எனினும், அந்தப் பகுதியில் போரிட்டு வரும் துருக்கி ஆதரவு கிளா்ச்சியாளா்கள் குா்துகள் மீதான தாக்குதலை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

மேலும், குா்துப் படையினரின் வாகனங்கள் மீது துருக்கி விமானம் குண்டுவீச்சு நடத்தியதாகவும், இதில் 5 பொதுமக்கள் உயிரிழந்தததாகவும் அந்த அமைப்பின் தலைவா் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com